Stop 9
பறவைகளைப்பற்றிப் பேசுதல்
Artwork
3409.பறவைகளைப்பற்றிப் பேசுதல் (0:00)
0:00
0:00
அவர் இறப்பதற்கு முந்தைய ஆண்டுகளில் முகமது தின் பெரிய அளவிலான எழுத்தழகியல் கலைப்படைப்புகளை உருவாக்கினார், வெளிநாடுகளில் தனிக் கண்காட்சிகளை நடத்தினார், கவிதைகளை இயற்றினார், மலாய் உலகில் இஸ்லாமிய அழகியல் எவ்வாறு தோன்றி வளர்ந்தது என்பது பற்றிக் கட்டுரைகளை எழுதினார். நாற்பதாண்டு ஆய்வு, பயணம், ஓவியம் தீட்டல் ஆகியவற்றைத் தொடர்ந்து, தான் பின்பற்றிய சூஃபித்துவம் அவரது தென்கிழக்கு ஆசியப் பாரம்பரியத்தால் சந்தேகத்திற்கு இடமின்றி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் உணர்ந்தார்.
முகமது தின், தென்கிழக்காசியாவின் இதிகாச நாடகமான வாயாங்கில் வாழ்நாள் முழுவதும் அக்கறை செலுத்தினார். அதனை அவர் தீவிரமாக ஆய்வுசெய்து தனது ஓவியத்தில் இணைத்தார். இந்தப் பகுதியில், வாயாங் குலித் எனும் நிழல் பாவைக்கூத்து வடிவில் டெர்விஷின் உருவத்தை ஆராயும் அவரது பிற்கால ஓவியங்களின் தொகுதியை நாம் காணவிருக்கிறோம். டெர்விஷ் என்பவர் சூஃபியைத் தேடுபவர், அறிவைச் சுமந்து செல்பவர், சிலசமயம் சமூகத்தின் விளிம்பில் காணப்பட்டாலும், மானிட முன்னேற்றத்தின் திசைகாட்டியாகச் செயல்படுபவர்.
இந்த அணுகுமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு, பாரசீக சூஃபி மெய்யுணர்வாளரான ஃபரித்-உத்-தின் அத்தாரின் புகழ்பெற்ற "பறவைகளின் மாநாடு" என்ற கவிதையை மேற்கோள் காட்டும் பறவைகளைப்பற்றிப் பேசுதல் ஆகும். அந்தக் கவிதை புத்திசாலியான ஹூப்போ பறவையின் வழிகாட்டுதலின் கீழ், 30 பறவைகளின் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. ஞானத்தைத் தேடித் தன் மாணவர்களை ஓர் ஆசிரியர் இட்டுச்செல்வதற்கு உவமையாக அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கண்காட்சியைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது, அருகே உள்ள தாழ்வாரங்களில் நிரப்பப்பட்டுள்ள முகமது தின்னின் மேற்கோள் வாசகங்களை ஆராய உங்களை அழைக்கிறோம். அவர் அக்கறை செலுத்திய இசை, கவிதை உள்ளிட்ட மேலும் பலவற்றிலும் அவரது படைப்புகளின் அணுகுமுறைகளுக்குப் பின்னால் இருந்த சிந்தனைகளை அவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அவற்றுக்கிடையே, அவரது நண்பரும் சக ஓவியருமான துமாடி பாட்ரி அவருக்கு அர்ப்பணித்த ஓவியத்தின் மீது உண்மையான அன்பு எனும் படைப்பும் இருக்கிறது. அர்த்தத்தைத் தேடி இடைவிடாத் தாகத்துடன் முகமது தின் பல்வேறு வழிகளையும் அறிவின் ஆதாரங்களையும் நாடியதை அவர் நினைவுகூர்கிறார்.
இந்த உலாவால் நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம். தொடர்ந்து அடுத்த கலைக்கூடத்திற்குச் சென்று, அங்கு கோ பெங் குவானின் “நடுக்க நகரைக்” காணலாம்.