Stop 23
3423

அறிவியலையும் கலையையும் இணைத்தல்

Artwork
Use headphones for a better listening experience and to be considerate to others.
3423.அறிவியலையும் கலையையும் இணைத்தல்(0:00)
0:00
0:00
இவரது கலை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே அறிவியலும் கலையும் எப்போதும் விடுவிக்கமுடியாத வகையில் தொடர்பு கொண்டுள்ளன; இவர் உருவமற்ற ஓவியத்தில் சோதனை செய்தபோதுகூட, அறிவியல் உலகத்தின் அம்சங்களைத் தனது படைப்புகளில் சேர்த்துக்கொண்டார். 1970-களிலும் 1980-களிலும் இவரது படைப்புகளில் கணினித்துறை ஒரு மத்திய பண்புக்கூறாக விளங்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஓர் ஆப்பிளின் வடித்திறக்கல் (டிஸ்டில்லேஷன் ஆஃப் என் ஆப்பிள்) மற்றும் கட்டடக் கலைஞராகக் கணினி (தி கம்பியூட்டர் அஸ் ஆர்க்கிடெக்ட்) போன்ற ஓவியங்கள் பற்றிக் குறிப்பிட்ட லின், ஆப்பிள் I கணினியின் பிறப்பை எதிர்பார்த்து முந்தையதையும் CAD எனும் கணினி உதவியுடன் கூடிய வடிவமைப்பின் வருகையை எதிர்பார்த்துப் பிந்தையதையும் வரைந்ததாகக் கூறினார். தமது மனிதன் இயந்திரம் உரையாடல் எனும் ஓவியத்தின் மூலம் மைக்ரோஸாஃப்ட் எக்ஸெல்லுக்கு முன்னோடியான லோட்டஸ் 1-2-3 செயல் திட்டத்திற்கும் இவர் புகழாரம் சூட்டியுள்ளார். வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுகள் கருத்தைக் கவரும் மற்றோர் ஈரப்பு சக்தியாக இருந்தது. அதனால் லின் கோளரங்கங்களுக்கும் வானிலை ஆய்வுக்கூடங்களுக்கும் அடிக்கடி வருகை புரிந்தார். இந்த ஆர்வம் மனிதனும் அவனது பிரபஞ்சமும் எனும் தொடர் ஓவியங்களுக்கு வழிவகுத்தது. அது மானிட இனத்திற்கும் சூரிய மண்டலம் விண்வெளி ஆகியவற்றுக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது. தற்செயலாக, கண்காட்சியின் சூழல் ஓர் இருட்டறைபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அது, விண்வெளியில் ஒரு கறுப்பு ஓட்டையில் நுழைவதைப் போன்றும், ஓவியரின் புவியீர்ப்புச் சக்தியால் பிடித்து இழுக்கப்படுவது போன்றும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த ஓவியங்கள், விண்ணுலகப் பொருள்களின் கரடுமுரடான தோற்றம், பால்மண்டலத்தின் தூசு அல்லது வாயுவைக் கொண்ட மேகங்கள் ஆகியவற்றை நையாண்டி செய்யும் விதமாகத் தீட்டப்பட்டுள்ளன. ஓவியங்களை நீங்கள் அணுக்கமாகப் பார்த்தால், அவற்றின் மேற்புறம் லாமா காகிதம், வெட்டப்பட்ட சணல், கித்தான் ஆகியவற்றால் கடுமையாகச் சொரசொரப்பு ஆக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், அதே வேளையில் அவை மென்மையாகப் பூசப்பட்ட சாயங்களுடன் இணைந்துள்ளன. ஸோன் எட் லுமியர் – 3டி போன்ற, 1970-களின் லின்னின் ஓவியங்களில் விண்வெளி, ஒலி, ஒளி ஆகியவைபற்றி அவர் மேற்கொண்ட சீரான ஆய்வுகள், உருவமற்ற பிரதிபலிப்புகளாக அதிகமாகத் தென்படுகின்றன. கிரீசின் ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசில் அன்றாடம் அவர் கண்ட ஒலி மற்றும் லேஸர் ஒளிக் காட்சியின் மறக்கமுடியாத அனுபவங்களை அந்த ஓவியங்கள் காட்டுகின்றன. அந்த ஓவியம் 1979-ல் சிங்கப்பூர் ஓவியச் சங்கம் முதல் முறையாக வழங்கிய டான் ட்ஸெ சோர் விருதையும் பெற்றுத் தந்தது.
Transcript
Share