Stop 22
@எண்ணத்தின் வேகத்தில்
லின் ஹ்சின் ஹ்சின்
Artwork
3422.@எண்ணத்தின் வேகத்தில்(0:00)
0:00
0:00
வணக்கம். நான் அட்லி டான். லின் ஹ்சின் ஹ்சின்னைப்பற்றிய இந்தக் கண்காட்சிப் பகுதியின் காப்பாளர். இவரது படைப்புகள் குறித்த இந்த உலாவில் நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்.
மின்னிலக்கம் தன்னுடன் உடன்பிறந்தது என்று கூறிக்கொள்ளும் இவர் ஒரு தகவல் தொழில்நுட்பத் தொலைநோக்காளர். தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகவும் கண்டுபிடிப்பாளராகவும் பணியாற்றும் லின், ஓர் ஓவியராகவும், கவிஞராகவும், பியானோ வாசிப்பவராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.
சிங்கப்பூரில் பிறந்த இவர் கணிதத்தில் பட்டம் பெற்ற பிறகு பிரிட்டனில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இளமையில் இவர் மூத்த ஓவியர்கள் லியு காங், சியோங் சூ பியெங் ஆகியோரிடம் ஓவியம் கற்றதுடன், பியானோ வாசிப்பிலும் இசைக் கலைஞராகவும் சான்றிதழ் பெற்றார்.
இந்தக் கண்காட்சி 1970-களிலிருந்து 1990-கள் வரையிலான லின்னின் படைப்புகளில் கவனம் செலுத்துகிறது. தொடக்கத்தில் இவர் காகிதம், கித்தான், எண்ணெய் வண்ணம் முதலியவற்றைப் பயன்படுத்தினார். எனினும், இவரது வாழ்க்கைத் தொழில் முன்னேற்றமடைந்தபோது, மின்னிலக்க ஓவிய நுட்பங்களைத் தனது ஓவியங்களில் இணைக்கத் தொடங்கினார்.
இந்தக் கண்காட்சியின் பிற பகுதியில் இவரது சக ஓவியரான ஜாஃபார் லத்தீஃபின் ஓவியங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அவரைப் போலவே இவரும், கலையில் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத் தொழில்நுட்பம் புதிய கருவிகளையும் வழிகளையும் வழங்குகிறது என்பதைக் கண்டுகொண்டார். ஆனால், ஜாஃபரைப் போலன்றி, சந்தையில் கிடைக்கும் மென்பொருள்களால் ஏற்படும் வரம்புக்குள் கட்டுப்பட விரும்பாமல், இவர் தன் சொந்தக் கணினிச் செயல் திட்டங்களை உருவாக்கினார்.
இந்தக் கண்காட்சியில் இவரது கலைத்திறன் தொலைநோக்கின் துடிக்கும் இதயமாகச் செயல்படும் ஒரு மின்னிலக்க அறையும் இருக்கிறது. அங்கு கலையை மின்னிலக்க உலகத்துடன் கலக்கும் இவரது அண்மைய நடவடிக்கைகள் காட்சிக்கு உள்ளன.
ஓவியம், இசை, கவிதை ஆகியவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் பின்னிப்பிணையும் உலகத்தில் மூழ்கித் திளைக்கும்படி உங்களை அழைக்கிறோம். அங்கு லின்னின் நடைமுறைகள்பற்றி மேலும் தகவல் கிடைக்கும்; அத்துடன் இவரது கலைத்திறன் தொலைநோக்குக் குறித்த பரிணாமத்தின் வளர்ச்சித் தடங்களையும் அறியலாம்.