Stop 21
மின்னிலக்க ஈடுபாடும் பேசப்படாத உரையாடல்களும்
Artwork
21.மின்னிலக்க ஈடுபாடும் பேசப்படாத உரையாடல்களும்(0:00)
0:00
0:00
ஜாஃபர் பின்னாளில் உருவாக்கிய படைப்புகள் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைக் கொண்டிருந்தன. 1990-களில் அவர் கணினியால் உருவாக்கப்படும் ஓவியத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தார். அத்துடன் தமது ஓவியங்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் கலைக்கூறாக ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தினார்.
1991-க்கும் 1992-க்கும் இடையில் ஜாஃபர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஓர் ஊடக வல்லுநராகப் பணியாற்றினார். அங்கு கணினிகளைப் பயன்படுத்திய அவர், கணினியால் வரையப்படும் ஓவியத்தை சிங்கப்பூரில் முதன் முதலில் உருவாக்கிய ஓவியர்களுள் ஒருவரானார். அவற்றில் சிலவற்றை நீங்கள் இங்கு காணலாம். இவற்றை உருவாக்க அவர் கொமோடோர் அமிகா கணினியில் டீலக்ஸ் பெயிண்ட் III வரைபடத் திருத்தியைப் பயன்படுத்தினார். முதல் ஆப்பிள் மெக்கிண்டோஷ் வெளியான அதே நேரத்தில் கொமோடோர் அமிகா எனும் தனிநபர் கணினியும் வெளியானது. அந்த நேரத்தில் அமிகாதான் தொழில்நுட்பத்தின் அதிநவீனக் கண்டுபிடிப்பு என்று கருதப்பட்டது.
அவருடைய பாத்திக் ஓவியங்களைப்போன்றே, ஜாஃபரின் மின்னிலக்கக் கலைப்படைப்பும் அவர் ஒரே நேரத்தில் எந்த அளவுக்கு ஆசிரியராகவும் மாணவராகவும் இருந்தார் என்பதைக் காட்டியது. அவர் தமது பகல் நேர வேலையில் ஊடகங்களை ஆராய்ந்து, அவை தனது ஓவியக் கலையில் எங்கு கொண்டுசெல்லும் என்பதை வெளிப்படையான ஆர்வத்துடன் பொருத்திப் பார்த்தார்.
1994-ல் ஜாஃபர் ஓய்வுபெற்றவுடன் மலேசியாவின் ஜோகூர் பாருவில் குடியேறினார். அங்கு, புதிய வேலை இடம் அவரது கலைக்கூடத்துக்குமேலும் அதிகமான பரப்பளவை வழங்கியது; அந்தச் சமயத்தில் அவர் வரைந்த ஓவியங்களில் பல, இரண்டு மீட்டர் நீளமானவை. உங்கள் வலது பக்கம் பேசப்படாத உரையாடல் எனும் தொடரிலிருந்து ஒரு படைப்பு இருக்கிறது. அதிலுள்ள ஜாவி எழுத்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குப் பதில், அந்த எழுத்துகள் ஒன்றன் மீது ஒன்று ஏறி, இரைச்சலான உரையாடல் போல, மிக நெருக்கமாக அடுக்கப்பட்டு, விளக்கமான வீச்சுகளால் பலமுறை எழுதப்பட்டுள்ளன.
பேசப்படாத உரையாடல் எனும் இந்தத் தொடரின் தலைப்பு, பல பத்தாண்டுகளுக்குமுன் ஓவியத்தை “மௌன மொழி” என்று ஜாஃபர் கூறியதை நினைவுபடுத்துகிறது. “ஒவ்வொரு வீச்சும் ஓவியரின் உள்ளத்தைக் கூறுகிறது, படைப்பு தனக்காகவே பேசுகிறது.”
ஆகவே, ஜாஃபர் லத்தீஃபின் ஓவியம், ஒரு நெசவுத் துணியின் வாழ்நாளுக்கு அப்பாலும் இருக்கிறது; வருங்காலத் தலைமுறைகளுக்கு, ஓர் ஓவியர் மற்றும் ஓர் ஆசிரியரான ஒரு சிங்கப்பூர் மகனின் உள்ளத்தையும் உணர்ச்சிகளையும் கூறுகிறது. அவர் தமது நாடு, கம்பங்களிலிருந்து நகரமாகவும் மூன்றாம் உலகிலிருந்து முதலாவதாகவும் வியக்கத்தக்க வகையில் உருமாறியதை வாழ்ந்து பார்த்தவர்.