Stop 3
நகரின் இரைச்சல்
3403.நகரின் இரைச்சல்(0:00)
0:00
0:00
தமது சொந்தச் சேமிப்பு, லீ அறநிறுவனத்தின் கல்வி நிதி, சகோதரியின் பண உதவி ஆகியவற்றுடன் சங்கின் அச்சுப்பதிவுப் பயணம் ஹல் உயர்கல்விக் கல்லூரியில் தொடங்கியது; அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் அவரைக் கொண்டுசென்றது.
சிங்கப்பூருக்கு 1986-ஆம் ஆண்டு திரும்பிய சங், தனக்கு “கலாசார அதிர்ச்சி” ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். அவர் வெளிநாட்டில் இருந்தபோது, சிங்கப்பூர் மிக வேகமான வளர்ச்சியையும் நவீனத்துவத்தையும் சந்தித்து இருந்தது. சிங்கப்பூர் ஓர் உலகளாவிய நகராக மாறப் போராடிக் கொண்டிருந்தபோது, அது அதிகப் போட்டிமிக்கதாகவும், சொகுசுப் பொருள்களுக்கு ஆசைப்படுவதாகவும் சமூகம் மாறியிருப்பதைக் கண்டு அவர் விக்கித்து நின்றார். “உயிர்வாழ்வதற்காக, எண்ணற்ற மக்கள் தங்கள் மனிதாபிமானத்தையும் தன்மானத்தையும் இழந்துவிட்டனர்,” என்பவை அவரது வார்த்தைகள்.
விரைவாக மாறிவரும் சமூகத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயன்ற வேளையில், அவருடைய கலைப் படைப்பாக்கத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றிய சில சம்பவங்கள் நிகழ்ந்தன. 1988-ல் ஐரோப்பாவிற்கு மேற்கொண்ட பள்ளிச் சுற்றுலா ஒன்றின்போது கீழே விழுந்த சங்கின் தலையில் அடிபட்டது. அதனால் சீழ்க்கட்டி ஏற்பட்டு, அவருடைய பெரும்பகுதியான பார்வையை இழக்கும்படி நேரிட்டது. அதனால், கடுமையான கசப்புணரவும் எரிச்சலும் ஏற்பட, அவர் தமது பணியாற்றும் பாணியை மாற்றிக்கொண்டார். அதன் பலனாக, விரைவில் அவர் மீண்டும் அச்சுப்பதிவுகளை உருவாக்கத் தொடங்கினார். இந்த முறை அவர் விரும்பும், சிக்கலான சூடாக்கும் மற்றும் ரசாயன நடைமுறைகள் அடங்கிய செதுக்குதல் முறைக்குப் பதிலாக, தொடுஉணர்வு முறையைக் கையாண்டார்.
இந்த இரண்டு நிகழ்வுகளின் தாக்கங்கள் நகரக் காடு போன்ற அவரது படைப்புகளில் காணலாம்; அதில், நகர்ப்புறச் சூழலில் மனித உருவங்கள் உச்சிக்குச் செல்வதற்கு வெறித்தனமாக முயல்வதைக் காணலாம். அதேபோல், அடையமுடியாத குறிக்கோள்கள் எனும் படைப்பில், உண்மை வாழ்க்கையில் சமூக அல்லது பணி ஏணியில் ஏறுவதைப்போல பல உருவங்கள் மர முக்காலி மீது ஏறுவதாகக் காட்டப்படுகிறது.
அடுத்த நிறுத்தத்தில், உடற்குறையைப் பொருட்படுத்தாது அவர் எவ்வாறு தொடர்ந்து கலைப் படைப்புகளை உருவாக்கினார் என்பதையும், எவ்வாறு பல்வேறு விதமான பொருட்களைக்கொண்டு அவர் சோதனை முயற்சிகளை மேற்கொண்டார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.