Stop 2
சங் சியோக் டின்: அச்சில் வரையப்பட்டது
3402.சங் சியோக் டின்: அச்சில் வரையப்பட்டது (0:00)
0:00
0:00
சங் சியோக் டின்: அச்சில் வரையப்பட்டது கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம். என் பெயர் ஜியா யுன். நான்தான் இந்தக் கண்காட்சியின் காப்பாளர்.
சங் சிங்கப்பூரில் மிகப் பிரபலமான அச்சுத் தயாரிப்பாளர்களில் ஒருவர். 1946-ல் பிறந்த அவர், சாய் சீ கம்பத்தில் ஒரு குடிசை வீட்டில் வளர்ந்தார். ஓர் ஆசிரியராகப் பயிற்சிபெற்ற அவர், தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் சீனம் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 1971-க்கும் 1872-க்கும் இடையில் நன்யாங் நுண்கலைக் கழகத்தில் மேற்கத்திய ஓவியத்தில் அவர் பட்டயம் பெற்றார்.
லண்டன் செயிண்ட் மார்ட்டின் கலைப் பள்ளியில் ஓராண்டு அடித்தளப் பயிற்சியைப் பெற்றபிறகு, ஹல் உயர்கல்விக் கல்லூரியில் 1976-ல் அச்சுத் தயாரிப்பில் சங் பட்டம் பெற்றார். அதன் வழி தனது கலைத்திறனை மெருகேற்ற அவர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்குப் பயணங்கள மேற்கொண்டார். 1986-ல் லாசால் கலைக் கல்லூரியை நிறுவிய பிரதர் ஜோசப் மெக்நல்லியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவரது அரப்பணிப்பும் கலை மீதான அவரது பேராவலும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் குழுவில் சேர சங்கிற்கு வழிகோலியது. அங்கு அவர் அச்சுப்பதிவுப் பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இந்தக் கண்காட்சி, அச்சுப்பதிப்பில் சங்கின் புத்தாக்கமிக்க சோதனை முயற்சிகளைக் காட்சிப்படுத்துகிறது. இதில், பிரிவுகளின் தலைப்புகள் அவரது எழுத்துகளிலிருந்து எடுக்கப்பட்டவை. எழுத்தையும் கலையையும் தமது இரட்டை அன்பு என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார்.
நடைபாதையிலும் கலைக்கூடத்தின் முதல் பகுதியிலும் இடம்பெற்றுள்ள படைப்புகள், சங் பிரிட்டனிலுள்ள ஹல்லில் படிக்கும்பொழுது உருவாக்கப்பட்டவை. இந்த இடங்களில் தமது அச்சுப்பதிப்பிற்கு உந்துசக்தியாக விளங்கிய இயற்கை நிலக்காட்சிகளின் தோற்றத்தையும் வடிவ அமைப்பையும் அவரால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. தண்ணீர் போன்ற தனிமங்கள், அமெரிக்காவின் அயோவாவில் உள்ள தட்டையான, திறந்தவெளிச் சமவெளி ஆகியவற்றின் சூழல் அனுபவத்தையும் அவரால் படம்பிடிக்க முடிந்தது.
அவரது வரைபடங்களுக்கும் அச்சுப்பதிப்புகளுக்கும் இடையில், சங்கின் சில பணிக் கருவிகள், செதுக்கு அச்சுக் கருவி, அச்சுத் தகடுகள் ஆகியவை அடங்கிய தெளிவான காட்சிப் பேழை ஒன்று இருக்கிறது.
நீங்கள் பார்த்து முடித்த பிறகு, இந்த முதல் பகுதியைவிட்டு வெளியேறினால், உங்கள் உலா தொடரும்.