Stop 19
பாத்திக்கில் திருப்புமுனை
Artwork
3419.பாத்திக்கில் திருப்புமுனை(0:00)
0:00
0:00
ஜாஃபர் அவரது புத்தாக்கமிக்க பாத்திக் ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர். “சுதந்திரமான கட்டுப்பாடற்ற கருத்து வெளிப்பாட்டை” எட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஓர் “இயல்பான” ஓவியர் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார். எனினும் மெதுவான, கடினமான நடைமுறையாக இருந்தாலும், பாத்திக்கில் அவர் ஓர் விற்பண்ணராக உருவானார்.
பல்வேறு வெப்பநிலையில் சாயங்களின் பல்வேறுவகையான எதிர்வினைகள், பஞ்சுகளின் ஊடுருவுத்திறன், தேன்மெழுகு மற்றும் வெண்மெழுகு ஆகியவற்றின் பாகுநிலை உள்ளிட்ட பாத்திக் நுட்பக் கூறுகளின் சிக்கல்களைப் பல ஆண்டுகளாக ஜாஃபர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஒவ்வொரு கூறு அல்லது நுட்பம் எந்த எல்லைவரை செல்ல முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
ஒரு பாத்திக் படைப்பை உருவாக்க, கவனமாகத் திட்டமிட்டு, குறிப்பிட்ட அளவுகளில் பல சுற்று மெழுகு மற்றும் சாயத்தைத் தோய்க்க வேண்டும். வண்ணங்கள் போலன்றி, இதில் சாயம் தோய்க்கப்பட்டு வண்ணங்கள் இடப்பட்ட பின், மாற்றங்கள் செய்ய முடியாது, தவறுகள் மறைக்கப்பட முடியாது.
ஜாஃபரின் பாத்திக்கின் துணிச்சலான கருத்தியல் வடிவங்கள், அந்தக் காலக்கட்டத்தில் வெளியான பாத்திக் துணிகளில் இருந்த கம்பத்துக் காட்சிகள், உள்ளூர் மக்கள், இயற்கைக் கூறுகள் அல்லது திரும்பத் திரும்ப வரும் படிவங்கள் போன்ற பொதுவான காட்சிகளைவிட வித்தியாசமானவை. இந்தக் கருத்தியல்வடிவங்கள் நுட்ப ரீதியாக மிகவும் சிரமமானவை. ஜாஃபர் ஒருமுறை நேர்காணலில் இவ்வாறு கூறினார்: “பலன் என்ன என்பது நமக்குத் தெரியாது, குறிப்பாக கருத்தியல் படைப்புகளில். எளிதில் தவறு நேர்ந்துவிடலாம்; அவற்றைத் திருத்த முடியாது. ஒரு குமிழ், வெள்ளைப் புள்ளிகள், வடியும் தவறான வண்ணம். இங்குதான் ஓவியர்கள் மனம்தளர்ந்து கைவிட்டுவிடுகிறார்கள்.”
உங்கள் முன்னாலுள்ள இந்தப் படைப்பு, பாத்திக் 14-87/88, ஜாஃபரின் தன்னம்பிக்கை மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறது. இங்கு, பாத்திக் ஓவியத்திற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பேனா போன்ற புனலையோ வேலைப்பாடுகொண்ட செம்பு அச்சையோ பயன்படுத்தாமல், உருகிய மெழுகு அகலமான தூரிகையின் மூலம் பூசப்பட்டுள்ளது. ஜாஃபர், சாயம் உறிஞ்சப்படுவதைத் தடுக்க ஒரு தடுப்புப் பொருளாக மட்டுமின்றி ஒரு வண்ணத்தைப் போல் மெழுகைப் பயன்படுத்தியிருக்கிறார். அதன் பலன், ஒரு துணிச்சலான நகரும் மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உணர்வை ஏற்படுத்துகிறது. இங்கு, பாத்திக் ஒரு பாரம்பரியக் கைவினைப் பொருள் என்பதையும் தாண்டி நவீன ஓவியத் துறையில் சேருகிறது.
இந்தச் சுவரின் நெடுகே நடந்தால், ஜாஃபரின் மேலும் பல பாத்திக் ஓவியங்களை நீங்கள் காணலாம். பல்வேறு வழிகளில் அவர் உருகிய மெழுகைப் பயன்படுத்தியிருப்பதை உங்களால் காண முடிகிறதா பாருங்கள் – கோடுகளாக, தூரிகைவீச்சுகளாக அல்லது ஜேக்சன் போல்லாக் போல சிதறல்களாகவும் துளிகளாகவும்.