Stop 16
3416

அமைதியான சிந்தனையின் நொடிகள்

Artwork
Use headphones for a better listening experience and to be considerate to others.
3416.அமைதியான சிந்தனையின் நொடிகள்(0:00)
0:00
0:00
கடற்கழியின் சந்தம் மற்றும் வெப்பமண்டல மழையின் ஆற்றல் ஆகியவற்றிலிருந்து நாம் இப்போது அமைதியான சாந்தம் உலவும் காடுகளுக்கும் ஸென் பூங்காக்கள் எனும் வடிவமைக்கப்பட்ட பாறைப் பூங்காக்களுக்கும் செல்வோம். கோயில் குளத்திற்குள் உற்றுநோக்குதல் எனும் இந்தப் படைப்பு, ஜப்பான் அறநிறுவனம் வழங்கிய உறுப்பினர் திட்டத்தின் கீழ் ஜப்பான் சென்றபோது, கியோட்டோவின் ஸென் பூங்காக்களிலும் கோயில்களிலும் உள்ள, பல நூற்றாண்டு பழமையான குளங்களுக்கு அருகில், பல மணி நேரம் அமர்ந்து, எங் டோ அமைதியாகச் சிந்தனைவயப்பட்டிருந்த வேளையில் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படைப்பு, மை, ஒட்டுப்படங்கள், நெகிழி ஆகியவற்றால், ஓவியர் உருவாக்கிய வாஷி எனும் பாரம்பரிய ஜப்பானியக் காகிதத்தின் மீது உருவாக்கப்பட்டது. ஒளி ஊடுருவக்கூடிய வாஷியின் இருண்ட அடுக்குகள், ஸென் குளங்களின் ஆழமான கலங்கலற்ற தண்ணீரையும், அவற்றின் வளமான வரலாற்று அடுக்குகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆங்காங்கே தோன்றும் சிவப்பு வண்ணம், பிரகாசமான வண்ணம்கொண்ட மீன்கள் ஆழத்தில் வேகமாகப் பாய்ந்து செல்வதைக் காட்டுகிறது. இந்தப் படைப்பைக் காணும்போது, ஆழமான தண்ணீருக்கு அருகில் அமைதியான நினைவுகளில் மூழ்குவதுபோன்ற கற்பனையுடன் அமைதியாகவும் அசைவற்றும் இருப்பதாக நீங்கள் உணரக்கூடும். இதே பகுதியில், ஓவியர் சொந்தமாகத் தயாரித்த காகிதத்தில், சீன மை, வண்ணக்கட்டி, நெகிழி, ஒட்டுப்படங்கள் ஆகியவைகொண்டு உருவாக்கப்பட்ட வனத்தில் இரவு எனும் மற்றொரு படைப்பைக் காண்பீர்கள். இந்தப் படைப்பு, இருட்டு நமக்கு என்ன புலப்படுத்தும் என்பதை அனுபவிக்கப் பார்வையாளரை அழைக்கிறது. இந்தச் சுவர்களில் உள்ள, ஓவியரின் மைத் தொடர்களின் மேலும் பல படைப்புகளைக் காண்பதற்கு நேரத்தைச் செலவிடுங்கள். பார்த்து முடித்தபிறகு, தரைத்தளத்தில் உள்ள எல்லையற்றதன் விளிம்பு எனும் மிகப் பெரிய சிற்பத்தைக் காணச் செல்லுங்கள். அது உங்கள் உலாவின் அடுத்த நிறுத்தம்.
Transcript
Share