Stop 14
எங் டோ – ஆறாம் அறிவு
எங் டோ
Artwork
3414.எங் டோ – ஆறாம் அறிவு (0:00)
0:00
0:00
எங் டோ – ஆறாம் அறிவு கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம். என் பெயர் ஷூஜுவான். நான் இந்தப் பிரிவின் காப்பாளர் மற்றும் உங்கள் வழிகாட்டி.
1947-ல் பிறந்த எங் டோ, ஒரு பன்முகத்திறன்கொண்ட கலைஞர். அனைத்துலகப் புகழ்பெற்ற அவரது படைப்புகள் தற்போதைய காலம்வரை சுமார் 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை. துணி, காகிதம், கலவை ஊடகம் ஆகியவற்றுடன் முப்பரிமாணப் படைப்புகளும் அவற்றில் அடங்கும்.
அவரது படைப்பு, சிந்தனைத்திறன்மிக்கதாகவும், நுட்பமான வேறுபாட்டுடன், நுண்ணியமான, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது என்று அடிக்கடி வர்ணிக்கப்பட்டது. அவரது கலைப்படைப்பு, இயற்கையுடனான ஆழ்ந்த உறவைச் சொல்லும் அதே வேளையில், பகலிலும் இரவிலும் மாறும் ஒவ்வொரு நொடியிலும் உந்துதலைக் கண்டுகொள்வதைப்பற்றியும் பேசுகிறது. அவரது படைப்புகள், தியானம், அறிந்துகொள்ளும் ஆர்வம், நிலையில்லாத் தன்மை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகின்றன. அதனால்தானோ என்னவோ, அவரது பல படைப்புகள் தெளிவான எல்லைகள் இல்லாமல், அந்தரத்தில் இருப்பதுபோல் தோன்றுகின்றன; இது, அவற்றைப்பற்றிய பல்வேறு கருத்துகளுக்கும் பதிவுகளுக்கும் வழிகோலியது.
நீங்கள் இந்தப் படைப்புகளைப் பார்த்துச் செல்லும்போது, உங்கள் உள்ளுணர்வு, உணர்ச்சிகள், நினைவுகள் ஆகியவற்றின் வழி பயணம் செய்ய உங்களை அழைக்கிறோம். ஒவ்வொரு கலைப்படைப்பையும் உன்னிப்பாகப் பார்த்து, உங்கள் சொந்த எண்ணங்களையும் விளக்கத்தையும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வலதுபுறத்தில், இந்தச் சுற்றுலாவின் முதல் படைப்புகளாக நறுமணம் தொடரைச் சேர்ந்தவை இருக்கின்றன. ஆசியாவின் வாசனைகளால் உந்தப்பட்ட ஓவியர், பல்வேறு வண்ணங்களால் பல அடுக்குகளை உலோகக் களிம்பால் உருவாக்குகிறார். உங்கள் கண்களும் மனமும் இந்தப் பல்வேறு வண்ணங்களின் நுட்பங்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளும் வேளையில், கிழக்கின் சுவையூட்டிகள் உங்கள் நினைவுக்கு வந்து, கதகதப்பு, அமைதி, பழக்கம், இதம் உள்ளிட்ட உணர்வுகள் உங்களுக்கு ஏற்படலாம்.
இங்கு பார்த்து முடித்த பிறகு உங்கள் [வலது/இடது] புறம் நகருங்கள். உங்கள் உலா அங்கு தொடரும்.