Stop 6
கட்டிடங்களின் மாற்றம் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்றத்திற்கு அறிமுகம்
நிலை 3, கீழ் இணைப்பு பாலம்
106.கட்டிடங்களின் மாற்றம் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்றத்திற்கு அறிமுகம்(0:00)
0:00
0:00
நகர மண்டபத்தையும் முன்னாள் உச்ச நீதிமன்றத்தையும் ஒரு கட்டடமாக இணைத்து இரண்டுக்கும் இடையில் ஒரு முற்றத்தையும் இரண்டு பாலங்களையும் அமைத்து உருவாகியுள்ளது சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர மண்டப அறையையும் தலைமை நீதிபதி அலுவலகத்தையும் கீழ் இணைப்புப் பாலம் இணைக்கிறது. நகர மண்டபக் கட்டடத்தை உச்ச நீதிமன்றப் பிரிவில் இருக்கும் ஒரு புதிய குடிமைப் பகுதியுடன் இணைக்கிறது மேல் இணைப்புப்பாலம்.
இந்த முன்னாள் உச்ச நீதிமன்றக் கட்டடம், தென்கிழக்கு ஆசியக் கலையைப் பராமரிக்கும் நிரந்தரக் கலைக்கூடத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கட்டடத்தை வடிவமைத்தவர் ஸ்ட்ரெய்ட்ஸ் குடியிருப்பு பொதுப்பணித் துறையின் தலைமைக் கட்டடக்கலை நிபுணரான ஃபிராங் டோரிங்டன் வார்ட். முன்பு டி லாயூரோப் கிராண்ட் ஓட்டல் இருந்த இடத்தில் எழுந்திருக்கும் இக்கட்டடம் 1936ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டது. காலனித்துவ அரசாங்கத்தின் உச்ச நீதிமன்றம் இங்கிருந்து செயல்பட்டது. சட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், சட்ட நூலகம் ஆகியவையும் இங்கேயே இருந்தன. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர் சிக்கியிருந்தபோது இதன் பெயர் ஸ்யோனான் கோடோ-ஹொய்ன், அதாவது ஸ்யோனான் உச்ச நீதிமன்றம் என்று மாற்றப்பட்டது. ஜப்பானிய ஆட்சியில் சிங்கப்பூர் ’ஸ்யோனான்’ என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் சிங்கப்பூர் ஒப்படைக்கப்பட்ட போதும், சுதந்திரம் கிடைத்த பிறகும், இளமையான சிங்கப்பூரின் உச்ச நீதிமன்றம் இங்கேயே செயல்பட்டது. 1992ல் உச்ச நீதிமன்றக் கட்டடமும் நகர மண்டபமும் தேசிய நினைவுச் சின்னங்களாக அரசிதழில் சேர்க்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு வாக்கில் உச்ச நீதிமன்றம் அருகிலிருக்கும் ஒரு பெரிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டதால் இப்பழைய உச்ச நீதிமன்றக் கட்டடம் இதர பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது. 2015ல் இதன் கதவுகள் திறக்கப்பட்டு சிங்கப்பூரின் புதிய தேசியக் கலைக்கூடத்தைக் காண பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.