Stop 17
ரோட்டுண்டா
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, ரோட்டுண்டா நூலகம் & காப்பகம்
Venue
117.ரோட்டுண்டா(0:00)
0:00
0:00
முன்பு ரோட்டுண்டா நூலகம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறீர்கள்.
முன்பொரு காலத்தில் இது முன்னாள் உச்ச நீதிமன்றத்தின் நூலகமாகப் பயன்பட்டது. நீதிபதிகள், நீதி ஆணையர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு ஒரு வள மையமாகவும், சட்ட பிரசுரங்களைச் சேகரித்து வைக்கப்படும் இடமாகவும் இது பயன்பட்டது. தலைமை நீதிபதி மேசையை வடிவமைத்த வில்லியம் ஹென்ரி ஸ்வாஃபீல்ட்தான் இங்கிருக்கும் அலங்காரங்களில் பெரும்பாலானவற்றையும் செய்திருக்கிறார். தரைத் தளத்தில் படிக்கும் மேசைகள் வட்ட வடிவத்தில், ரோட்டுண்டாவின் வடிவத்தை ஒட்டியே செய்யப்பட்டிருக்கின்றன. மேசைகளுடன் ரோட்டுண்டாவின் சுவர்களை ஒட்டிய புத்தக அலமாரிகளும் அடுக்கு கட்டுமானங்களும் தூண்களுக்கிடையில் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இடைநிலை தளத்தில், நூலகத்தின் வளைந்த சுவர்களை ஒட்டியே பொருத்தப்பட்டிருக்கின்றன. தேக்கு மரத்தை இழைத்து செதுக்கிச் செய்யப்பட்டிருக்கும் இந்த வடிவம், சுவர்களுக்குத் திரைச்சீலை போல் அமைந்துள்ளது.
20,000க்கும் மேற்பட்ட பிரசுரங்கள் ஒழுங்காக தொகுப்புகளாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பதனிட்டதோல் அட்டை போடப்பட்டிருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது, நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுப்புகளைக் குறிப்பிட்டு நூலகக் காப்பாளருக்குச் செய்தி அனுப்பி பெற்றுக் கொள்வார்கள் என்று 1939ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. கேட்கப்பட்ட தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை பின்னப்பட்ட கூடைகளில் போடுவார் காப்பாளர். அதனை இரண்டு அலுவலர்கள் நீதிமன்ற அறைக்கு எடுத்துச் செல்வார்கள். ஒவ்வொரு வழக்கின் இறுதியிலும் அந்தப் பின்னல் கூடைகள் நூலகத்திற்குத் திரும்பி வந்துவிடும்.
ரோட்டுண்டஸ் என்ற லத்தீன் சொல்லிலிருந்து ரோட்டுண்டா என்ற பெயர் வந்திருக்கிறது. வட்ட வடிவமாகவும், சில சமயங்களில் உச்சியில் குவிமாடமும் உள்ள கட்டடத்தை அது குறிக்கிறது. வட்டக் கூடத்தின் குவிமாடத்தை இயற்கை ஒளியில் பிரகாசிக்கச் செய்ய, வளைவாகப் பொருத்தப்பட்டிருக்கும் பதினாறு சாளரங்களும், தரைத் தளத்திலிருக்கும் ஜன்னல்களும் உதவுகின்றன. உச்ச நீதிமன்றக் கட்டடத்தின் 4ஆம் அடுக்கு கூரையிலிருந்து இக்குவிமாடத்தைக் காண முடியும். சுற்றுலாவில் நேரம் கிடைக்கும் போது, உங்கள் திரையில் உள்ள படத்தைத் தட்டி அதன் அருகாமைக் காட்சியைப் பாருங்கள்.
1991ஆம் ஆண்டிலிருந்து இந்த ரோட்டுண்டா ஒரு நூலகமாகச் செயல்படுவது நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம் அதிகரித்துக் கொண்டிருக்கும் பிரசுரங்களுக்குத் தேவையான இடம் இல்லாததே. நகர மண்டபத்தில் இதைப் போல இரண்டரை மடங்கு பெரிய இடத்திற்கு நூலகம் குடிபெயர்ந்தது.