Stop 16
கண்காட்சி அரங்கம் 7 (முன்னர் நீதிமன்ற அறை 3) மற்றும் தகவல் மேசை
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, UOB தென்கிழக்கு ஆசிய கேலரி 7
Venue
116.கண்காட்சி அரங்கம் 7 (முன்னர் நீதிமன்ற அறை 3) மற்றும் தகவல் மேசை(0:00)
0:00
0:00
கலைக்கூடம் 7, அல்லது முன்னாள் நீதிமன்ற அவை 3-ன் அமைவு கலைக்கூடம் 1-ஐப் படம்பிடித்தது போல் ஒத்திருக்கிறது. பார்வையாளர்கள் அமரும் இடம் போன்ற அசல் நீதிமன்ற அவையின் சில பகுதிகளுக்கு இன்று பொதுமக்கள் செல்ல முடியாது என்றாலும் அறையின் மத்தியிலிருக்கும் கைதிகள் கூண்டை நாம் பார்க்க முடியும். இங்கேதான் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு நிறுத்தப்படுவார்கள். கூண்டின் அருகில் சென்று அதை எட்டிப் பாருங்கள். நீதிமன்ற அவைக்குக் கீழிருக்கும் சிறையிலிருந்து, நான்கு நீதிமன்ற அகளை இணைக்கும் பாதை கட்டமைப்பு வழியாகக் கைதிகள் அழைத்து வரப்பட்டார்கள். கைதிகள் கூண்டின் சிறிய கதவைத் திறந்து கூண்டில் ஏறி நிற்க வேண்டும்.
பிரபலமாகப் பேசப்பட்ட பல வழக்குகள் இந்தக் கலைக்கூட நீதிமன்ற அறைகளில் நடந்திருக்கின்றன. கலைக்கூடம் 10-இல் நடந்த ஒரு வழக்குக்கு ”இரு பத்து நிகழ்வு” என்று பெயர். 1943, 10ஆம் மாதம் 10ஆம் தேதி ஜப்பானிய ஆக்ரமிப்பில் சிங்கப்பூர் இருந்தபோது நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கவே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கெம்பெய்டெய் எனப்படும் அரச ஜப்பானிய இராணுவத்தின் இராணுவப் போலீஸ், பொதுமக்களில் 57 பேரைப் பிடித்து கொடுமைப்படுத்தியது. துறைமுகத்தில் இருந்த ஜப்பானியக் கப்பலில் புகுந்து அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இராணுவப் போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. கைது செய்து துன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவருக்குக் கூட இது குறித்த விவரங்கள் தெரியாது என்றாலும், அவர்களில் 15 பேர் சிங்கப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் உயிரிழந்தனர்.
போர் முடிந்த பிறகு, இந்த நடவடிக்கையை மேற்கொண்ட 21 கெம்பெய்டெய் படை வீரர்கள் போர்க்கால அட்டூழியங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். சுற்றுலா ஆரம்பப் பட்டியலில் முதல் நிறுத்தத்தில் காணப்படும் படத்தைத் தட்டி, 1946, ஜனவரி 21ஆம் தேதி இதே நீதிமன்ற அறையில் கைதிக் கூண்டில் அவர்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனை அளித்தும், 7 பேரை விடுதலை செய்தும், மீதமுள்ளவர்களுக்கு 1 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற அறைக்கு அடியில் கைதிகளுக்காக இருந்த பத்து சிறைகளில் இரண்டை மட்டும் முன்பிருந்ததைப் போலவே தேசியக் கலைக்கூடம் பாதுகாத்து வைத்திருக்கிறது. சில சிறப்புச் சுற்றுலா பயணங்களின் போது மட்டுமே அங்கே செல்ல அனுமதி கிடைக்கும். எனினும் அதன் படத்தை உங்கள் சுற்றுலா முதல் நிறுத்தத்தில் ‘9.3 – தங்க வைக்கும் சிறைகள்’ என்ற திரையில் காணலாம். பிரதிவாதிகளை இரவு முழுவதும் அங்கே தங்க வைப்பதில்லை என்பதால், கழிவறை மற்றும் சுவரை ஒட்டிய ஒரு கற்காரை மேசை என்று குறைந்த வசதி மட்டுமே செய்யப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக் கொள்வதைத் தடுக்க கழிவறை தண்ணீர் பீய்ச்சும் அமைப்பானது அறைக்கு வெளிப்புறம் கட்டப்பட்டிருந்தது.
வழக்கின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்புற வாசல் வழியாகச் சிறைகளுக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டார்கள். பிரபலமான பல வழக்குகளை இந்த நீதிமன்ற அறைகள் நடத்தியிருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களை பொதுமக்கள் கண்களில் படாமல் சிறைக் கூண்டுகளுக்கு அழைத்து வருவதில் நீதிமன்றம் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டது.