Stop 14
செங்கற்கள் மற்றும் மனிதர்கள்
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, உச்ச நீதிமன்ற ஃபோயர்
114.செங்கற்கள் மற்றும் மனிதர்கள்(0:00)
0:00
0:00
ருடோல்ஃபோ நோலி (1888- 1963) சிங்கப்பூரில் 1921 முதல் 1956 வரை பணி புரிந்தார். காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்களில் காணப்படும் புடைப்புச் சித்திரங்கள் இவர் கைவண்ணத்தால் உருவானவை.
முக்கோண வாயிலை உருவாக்கிய கலைஞர் ருடோல்ஃபோ நோலியின் படத்தை நீங்கள் இப்பொழுது திரையில் காண்கிறீர்கள். அக்காலத்தில் பளிங்குச் சுரங்கம் எதுவும் சிங்கப்பூரில் இல்லை என்பதால் தனக்குத் தேவைப்படும் பொருள்களைச் சேகரிப்பதில் நோலி திறமைசாலியாக இருக்க வேண்டியிருந்தது. ஆகையால் கிரானோலித்திக், அல்லது ஷாங்ஹாய் காரை என்று சொல்லப்படும் ஒரு மாற்றுப் பொருளை உருவாக்கி கட்டட முகப்புகளுக்கு உயிரூட்டினார். இதன் கூறுப்பொருள்கள் இரகசியமானவை என்றாலும், அடிப்படையில் இவை வெள்ளைப் பசைமண், சிங்கப்பூரில் கிடைக்கும் நொறுங்கிய கிரானைட் கல், இயற்கைப் பொருள்களிலிருந்து கிடைக்கும் நிறமிகள் மற்றும் நீர்க் கலவை ஆகும்.
ஷாங்ஹாய் காரை என்பது, சீன-ஜப்பான் போரில் ஷாங்ஹாய் நகரிலிருந்து தப்பித்து வந்த சீன கைவினைஞர்களின் தயாரிப்பைக் குறிக்கிறது. ஐரோப்பியக் கட்டடக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்த இந்த சீன கைவினைஞர்கள் சிங்கப்பூருக்கு ஒத்தாசையாக இருந்தனர். காலனித்துவ சிங்கப்பூரில் கட்டப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்றம், பிற கட்டடங்கள் ஆகியவற்றில் பணியாற்றியவர்கள் நோலியின் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த குடிபெயர்ந்து வந்த சீனர்கள்தான். நோலி கட்டிய அல்லது வடிவமைத்த பல தூண்களே இன்றும் பல கட்டடங்களில் காணப்படுகின்றன. அவர் வடிவமைத்த சிறப்பு மிக்க கைவண்ணங்களை உங்களால் அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள்.