Stop 13
அடையாளம் மற்றும் பெடிமென்ட் (உள்புறம்)
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, உச்ச நீதிமன்ற ஃபோயர்
113.அடையாளம் மற்றும் பெடிமென்ட் (உள்புறம்)(0:00)
0:00
0:00
இப்பொழுது வெளியில் மாடி முகப்புக்குச் செல்ல இயலாது.
கண்ணாடிக் கதவு வழியாக வெளியில் பரந்து விரிந்திருக்கும் பாடாங் திடலைப் பாருங்கள். பாடாங் என்பதற்கு மலாய் மொழியில் ‘தட்டையான திடல்’ என்று பொருள். பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இங்கே அரங்கேறியுள்ளன. ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த நிகழ்ச்சிக்கு இது ஒரு சாட்சியாக நின்றிருந்தது. சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 9, 1966 அன்று இங்கேதான் நடந்தது. 23,000 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அணிவகுத்து நகர மண்டபத்தைக் கடந்துச் சென்று சிங்கப்பூருக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காண இப்பொழுது ‘8.1 – தேசிய தின அணிவகுப்பு’ பொத்தானை அழுத்துங்கள். 1974ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் தேசிய தின அணிவகுப்பு இங்குதான் நடந்தேறியது.
உச்ச நீதி மன்றப் பிரிவின் புறத்தோற்றம் ஒத்த பரிமாணமுள்ளது. உங்கள் இடது வலது இரண்டு பக்கங்களில் தெரியும் மேல்மாடத்தை ஒட்டிய ஆறு பெரிய தூண்கள் நீங்கள் நின்று கொண்டிருக்கும் மேல்மாடத்தைத் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களை நிறுவிய இத்தாலிய சிற்பி ருடோல்ஃபோ நோலிதான் உங்கள் வலப்புறத்திலிருக்கும் நகர மண்டபக் கட்டட முகப்பையும் வடிவமைத்தார்.
முகப்புக்கு மேலே உயரத்தில் பாருங்கள். அங்கு தெரியும் முக்கோண வாயில், முன்னாள் உச்ச நீதிமன்றத்தின் நுழைவாயிலைக் குறிக்கிறது. இதையும் நோலிதான் வடிவமைத்தார். சட்டம், நீதியின் கதைகளை முக்கோண வாயில் உருவங்கள் சித்திரிக்கின்றன. திரையில் முக்கோண வாயிலின் துல்லிய படங்கள் தெரிகின்றன. நடுவிலிருக்கும் புகழ்பெற்ற நீதி தேவதையின் கையில் நீதித்தராசு உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதன் தட்டுகள் தாழ்ந்திருந்தது தெரிய வந்தது. ஜப்பானியரின் குண்டு வீச்சின் அதிர்வுகளால் இது நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. கரங்களை விரித்து மண்டியிட்டிருக்கும் மனித உருவம் கருணையை வேண்டுகிறது. நோலியின் ஒரே மகள் லீனாவின் சாயலில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதர உருவங்கள் சட்டம், நன்றியுணர்வு, வளப்பம், செழுமை ஆகியவற்றைச் சித்திரிக்கின்றன. இந்த முக்கோண வாயிலை வடிவமைத்து முடிக்க நோலிக்கு ஓர் ஆண்டு பிடித்தது. 13 டன் எடை கொண்ட இது கிரானோலிதிக் காரை என்ற சிறப்புப் பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கோண வாயிலின் அடியில் சின்னங்களின் சுவடுகள் உள்ளன. ஒரு சிங்கத் தோற்றமுள்ள உருவமும், ஒற்றைக் கொம்புள்ள விலங்கும் நடுவில் உள்ளன. முன்னாள் உச்ச நீதிமன்றக் கட்டடத்தைப் பாதுகாத்து வரும்போது, கட்டட முகப்பிலிருந்து மூன்று பிரிட்டிஷ் காலனித்துவ கால முகடு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முகடுகள் காணாமல் போய்விட்டன; என்றாலும், சிங்கப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சி அடையாளங்களை அகற்றும் விதமாக ஜப்பானியர்கள்தான் இவற்றை வேண்டுமென்றே நீக்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 1966ஆம் ஆண்டு முதல் தேசிய தின அணிவகுப்பு போன்ற கட்டடம் குறித்த போருக்குப் பிந்திய ஆவணப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, காணாமல் போயிருந்த முகடுகள் திரும்பவும் பொருத்தப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. இதை மறுசீரமைக்க உதவும் ஆவண வரைபடங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு விதிகளை அனுசரித்து இயல்பு நிலையிலேயே இவை இப்பொழுது பாதுகாக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் முகடுகள் பாழடைந்து போவதைத் தடுக்கும் விதமாக பாதுகாப்புப் பொருள்களைப் பயன்படுத்தி இவை பராமரிக்கப்படுகின்றன.
கலைக்கூடத்திலிருந்து கடைசியாக வெளியில் செல்லும் வேளையில், வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் நின்று கொண்டிருக்கும் இந்த மேல்மாடத்தின் ஒப்பனைப் பட்டையின் அழகை வெளியிலிருந்து காணத் தவறாதீர்கள். இந்த ஒப்பனைப் பட்டையில் ஐந்து அடுக்குகள் உள்ளன. அன்றையக் காலனித்துவ சிங்கப்பூரின் வணிகத்தை இவை சுட்டிக் காட்டுகின்றன. ஒப்பனைப் பட்டையிலிருக்கும் அடுக்குகள் பற்றிய மேல் விவரங்களை நீங்கள் உங்கள் திரையில் பார்த்துதெரிந்து கொள்ளலாம்.