Stop 11
111

கண்காட்சி அரங்கம் 1 (முன்னாள் நீதிமன்ற அறை 1)

நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, UOB தென்கிழக்கு ஆசிய கேலரி 1
Venue
நேஷனல் கேலரி சிங்கப்பூர், கான்கோர்ஸ், நிலை 1 இல் தொடங்கவும்
Use headphones for a better listening experience and to be considerate to others.
111.கண்காட்சி அரங்கம் 1 (முன்னாள் நீதிமன்ற அறை 1)(0:00)
0:00
0:00
1939ஆம் ஆண்டில் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அறைகளை வடிவமைக்க எட்டு வித்தியாசமான வரைபடங்களைத் தயாரித்தார் கட்டடக்கலை வல்லுநர் ஃபிராங் டோரிங்டன் வார்ட். ஒரு குவிமாட நூலகத்தைச் சுற்றியிருப்பது போல் நான்கு நீதிமன்ற அறைகளைக் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. காலப்போக்கில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு ஏழு கூடுதல் அறைகள் கட்டப்பட்டன. முன்னாள் உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட நான்கு நீதிமன்ற அறைகளில் இதுவும் ஒன்று. இன்றுவரை அதன் மூல வடிவமைப்பு குன்றாத வண்ணம் அது பாதுகாக்கப்படுகிறது. ஒலியியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அந்தக் காலக் கட்டத்திலும், நீதிமன்ற அறையில் துல்லியமான ஒலிபெருக்கி அமைப்பு வசதியிலும், பயன்படுத்தும் பொருள்களிலும் வார்ட் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். நீதிபதி குரலை உயர்த்திப் பேசாமல்கூட முன்வரிசையில் உள்ளவர்களுக்கும் பார்வையாளர் கூட்டத்தில் பின்வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேட்கும் வண்ணம் அவரது வடிவமைப்பு அமைந்திருந்தது. உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீதிமன்ற அறையின் முன்னாலிருக்கும் வெள்ளை குவிமாட இடைவெளியில் செல்லுங்கள். இதுதான் நீதிபதி அமரும் இடம். இதன் முழு அடிப்பகுதி மட்டுமல்லாமல் தரை, சுவர்கள், கூரைகளிலும் தக்கை சேர்த்த காரை பூசப்பட்டு ஒலியை உறிஞ்சிக்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒலியியல் காரையைப் பயன்படுத்தி நீதிமன்ற அறைகள் கட்டப்படுவது மலாயாவிலேயே முதல் முறை என்று அன்றைய உள்ளூர் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. அந்த இடத்திலிருந்து திரும்பி அறையைப் பார்க்கும் போது, ஒரு நீதிபதியின் பார்வையில் நீதிமன்ற அறை தெரியும். உங்கள் முன்புறத்தில் குறிப்பெடுப்பவர் அமர்ந்திருப்பார். நடுவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விலங்கு மாட்டப்பட்டு நிற்கும் கூடம் இருந்தது. நீதிமன்ற அவையின் பின்புறத்தில், இடைநிலை மட்டத்தில் பார்வையாளர்களுக்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. தனி வாசல் வசதியுள்ள இக்கூடத்தில், பார்வையாளர்களாக சுமார் 100 பேர் அவை நடவடிக்கைகளைக் காணும் வசதி உள்ளது. இன்று நீங்கள் காணும் பல அம்சங்கள் - கலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகளிலிருந்து மேற்கூரை வடிவமைப்புகள் வரை அனைத்துமே 1939ல் கட்டப்பட்ட அசல் கட்டுமானங்கள்தான். நீதிமன்ற அவைச் சுவர்களிலுள்ள காற்று வழிகளும்கூட அசலானவையே. நீதிமன்ற அவைகளாக இருந்தவை இன்று கலைக்கூடமாக மாறியிருந்தாலும், ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாகப் பார்த்தால் இதன் பழைய கதையின் சுவடுகள் தெளிவாகத் தெரியும்.
Transcript
Share