Stop 6
முகமது தின் முகமது: தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மூதாதையர்
முகமது தின் முகமது
3406.முகமது தின் முகமது: தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மூதாதையர் (0:00)
0:00
0:00
முகமது தின் முகமது: தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மூதாதையர் கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம். என் பெயர் தியோ ஹூய் மின். ஷப்பீர் ஹூசேன் முஸ்தஃபாவுடன் நான் கண்காட்சியின் இந்தப் பகுதிக்கு இணைக் காப்பாளராக இருக்கிறேன்.
முகமது தின் ஒரு பலதுறைத் திறனாளர்; கருத்துகளைப் வெளிப்படுத்தும் சக்திமிக்க ஓவியத்திற்காக அவர் அறியப்பட்டவர். அத்துடன் பாரம்பரிய வைத்தியர், குரு சிலாத் அல்லது மலாய்த் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர், எழுத்தாளர் மற்றும் தென்கிழக்கு ஆசிய கலைப்பொருட்களின் சேகரிப்பாளர் ஆவார். இந்த அனைத்துப் பல்வேறுபட்ட நடமுறை அம்சங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை; மேலும் உலகளாவிய நிலையில் தாக்கம் ஏற்படுத்திய இஸ்லாத்தின் மெய்யுணர்வு மற்றும் துறவு வடிவமான சூஃபியால் அவை கட்டுண்டு இருப்பவை.
முகமது தின் மலாக்காவில் 1955-ல் பிறந்து, இரண்டு வயதானபோது தன் குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூரில் உள்ள நன்யாங் நுண்கலைக் கழகத்தில் 1976-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பழைய புகிஸ் தெருவில் ஒரு தெருவோர ஓவியராகத் தனது ஓவியர் வாழ்க்கையைத் தொடங்கினார்.
1983-ஆம் ஆண்டில், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தின் விளைவாக, அவரது கால் அநேகமாகத் துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது; எனினும் பாரம்பரிய வைத்தியரான அவரது சூஃபி ஆசிரியர் அளித்த சிகிச்சையால், அவர் முழுமையாகக் குணமடைந்தார். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சம்பவம், மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரியச் சிகிச்சைமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவரது வாழ்விலும் கலைப்பணியிலும் மறுஉறுதிப்படுத்தியது. அத்துடன் தென்கிழக்காசிய இஸ்லாமியப் பொருள்கள் மற்றும் கலைப்படைப்புகள்மீது அவரது ஆர்வத்தை ஆழப்படுத்தியது.
முகமது தின்னின் விரிவான மற்றும் ஈர்க்கத்தக்க திரட்டுகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், அவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகளும் இதில் இருக்கின்றன. இந்தக் கலைக்கூடத்தின் நடுவில் உள்ள ஆன்மாக்களின் பிரமிடு: அலிஃபைப் போற்றுதல் எனும் நிறுவலை அணுக்கமாகக் கவனிக்குபம்படி உங்களை அழைக்கிறோம். அவரது உலகக் கண்ணோட்டத்தின் ஒருங்கிணைப்பாக அது திகழ்கிறது. அது அவருடைய மனைவியும் சக ஓவியருமான ஹமீதா ஜலீலுடனான நெருக்கமான ஒத்துழைப்பால், ஒரு கோட்டோவியத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
இந்தப் பிரிவில் உள்ள பல்வேறு பொருள்ககள், கலைப்பொருள்கள், இசை ஆகியவற்றை நீங்கள் ஆராயும்போது, முகமது தின்னின் கலைத்துறை நடைமுறை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றுடன் அவரது ஆன்மீக அறிவொளிக்கான நீடித்த தேடலையும் ஆமாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.