Stop 2
அரசு கட்டிடங்கள் மற்றும் படிக்கட்டுகள் பற்றிய அறிமுகம்
சிட்டி ஹால் ஃபோயர், சிட்டி ஹால் விங், லெவல் 2
102.அரசு கட்டிடங்கள் மற்றும் படிக்கட்டுகள் பற்றிய அறிமுகம்(0:00)
0:00
0:00
நீங்கள் நகர மண்டபக் கட்டடத்தில் இரண்டாம் தளத்தில் இருக்கிறீர்கள்.
நகர மண்டபமும், முன்னாள் உச்ச நீதிமன்றக் கட்டடங்களும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் சாலையில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. அவற்றுக்கு எதிரே பாடாங் என்ற பெரிய திடல் உள்ளது. பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரை அடையாளம் காட்டும் கட்டடக்கலைச் சின்னங்களாக இவை புகழ் பெற்றிருந்தன. இப்பொழுது ஒன்று சேர்க்கப்பட்டு அவை சிங்கப்பூரின் தேசியக் கலைக்கூடமாக உருவாகியிருப்பது பொருத்தமானது.
சிங்கப்பூர் ஓவியங்களின் நிரந்தர காட்சிக்கூடங்களையும் மாறும் கண்காட்சிகளுக்கான காட்சிக் கூடங்களையும் தன்னுள் கொண்டுள்ளது நகர மண்டபக் கட்டடம். சேமுவல் டக்ளஸ், அலெக்சாண்டர் கோர்டன் ஆகியோர் வடிவமைத்த இக்கட்டடம் 1929 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. அந்தக் காலத்தில் நகராட்சி கட்டடம் என்று பெயர் பெற்றிருந்த இக்கட்டடத்தில் சிங்கப்பூர் நகர வசதிகளைப் பராமரித்த நகராட்சி மன்றம் செயல்பட்டது. 1963 முதல் 1991க்கு இடைப்பட்ட காலத்தில் பல அரசு அலுவலகங்களும் நீதிமன்ற அவைகளும் இங்கே செயல்பட்டன. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் அலுவலகமும் இங்குதான் இருந்தது.
சிங்கப்பூர் வரலாற்றின் பல நிகழ்வுகளுக்குச் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது இக்கட்டடம். முக்கியமாக நகர மண்டபப் படிகளில்தான் பல தேசிய நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. 1945 செப்டம்பர் 12ல் நட்புப் படைகளிடம் ஜப்பானியர்கள் சரண் அடைந்தது நகர மண்டபத்தில்தான். 1959ல் பிரதமர் லீ குவான் இயூ இந்த நகர மண்டபப் படிகளில் நின்றுதான் சிங்கப்பூருக்குத் தன்னாட்சியை அறிவித்தார்.