தியானத்தில் முகம்
மெதுவான கலை வழிகாட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். அதன் வழியாக, அப்துல் கனி ஹமீதின் தியானத்தில் முகம் ஆகியவற்றைச் சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் உங்களுக்குக் கொண்டுவருகிறது.
மெதுவாகப் பார்த்தல் மற்றும் கவனமுடைமை ஆகிய கொள்கைகளால் உந்தப்பட்டு, மெதுவான கலை வழிகாட்டி, கலைக்கூடத்திலுள்ள ஒரு கலைப்படைப்பின் வாயிலாக உங்களை ஓர் ஆழ்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும். இந்த அனுபவம், மெதுவடைதல், காணொளிக் கலையைப் பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழித்தல், அதை உணர்வுடனும், ஆழ்ந்து ஆராய்ந்தும் உள்வாங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வழிகாட்டி, கவனமுடைமை நடைமுறைகளை வெளிப்படுத்தி, கலையைப் புலன்கள் சார்ந்த மற்றும் பிரதிபலிக்கிற அனுபவத்தைப் பெறும் வகையில் சிந்திக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
கவனமுடைமை அடிப்படையிலான இந்த அனுபவம் மிகவும் தன்னாய்வு மிக்கது என்பதால், அது உங்கள் எண்ணங்களுடனும் உணர்ச்சிகளுடனும் உங்களைக் கலந்துகொள்ள அழைக்கிறது; அதை, சில வேளைகளில் கடுமையானதாகவும் திணறவைப்பதாகவும் உணரலாம். இன்று அதுதான் உங்கள் நிலைமை என்றால் தயவுசெய்து இந்த ஒலி அனுபவத்திலிருந்து விலகி, அமைதி அறைக்குச் செல்லுங்கள் அல்லது பாதுகாப்பாக ஓய்வெடுக்க முடியும் என்று நீங்கள் உணரும் இடத்திற்குச் செல்லுங்கள்.
மெதுவான கலை வழிகாட்டியுடனான உங்கள் அனுபவத்தின் முடிவில், நீங்கள் அந்தக் கலைப்படைப்புடன் ஓர் ஆழமான, உணர்வுபூர்வமான தொடர்பைக் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும், நீங்கள் இந்தக் கணத்தில் நிலையாகவும் அமைதியாவும் உணர்வீர்கள் என்றும் நம்புகிறோம்.
இந்த ஒலி வழிகாட்டி, உங்களை இரண்டு நிறுத்தங்களுக்கு இட்டுச் செல்லும் – முதலில் அமைதி அறை; அதன் பிறகு, கண்காட்சிக் கூடங்களுக்குள் உள்ள கலைப்படைப்பு. உங்கள் அனுபவத்தின் ஊடே, கலைப்படைப்பு இருக்கும் இடத்தை அறிவது உள்பட உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் எங்கள் நட்பான முன்சேவை முகப்பு ஊழியர்களை நாடலாம்.
உங்கள் சுற்றுலாவைத் தொடங்க நகர மண்டபப் பிரிவின் கீழ்த்தளம் 1-ல் உள்ள அமைதி அறைக்குச் செல்லுங்கள்.
நீங்கள் அமைதி அறைக்குச் சென்றபிறகு, அடுத்த தடத்தில் உள்ள “பிளே”யை அழுத்துங்கள்.
நாம் இப்போது சிங்கப்பூர்க் கலைஞர் அப்துல் கனி ஹமீதின் தியானத்தில் முகம் கலைப்படைப்புக்கு வந்துவிட்டோம். நாம் இந்தக் கலைப்படைப்பை ஆராயும் வேளையில் உங்களுக்கு வசதியான முறையில் கட்டுப்பாடின்றி நகரலாம். இந்தக் கலைப்படைப்புக்கு முன்னால் கலைக்கூடத் தரையில்கூட நீங்கள் அமரலாம்.
நமக்கு முன்னால் உள்ள இந்தக் கலைப்படைப்பு, ஜாவாவில் தோன்றிய பாத்திக் எனும் நுட்பத்தைச் சார்ந்தது. அது துணியை சாயத்தில் தோய்த்து, மெழுகுத்தடுப்பு செய்யும் முறையுடன் கூடியது. கெட்டியான சாயக் கலவையுடன் வலுவான, கறுப்பு வெளிவிளிம்புகளில் இதைக் காணலாம். மென்மையான நீல வண்ணங்கள், இதயத் துடிப்பை அளக்கும் கருவி பதிவுசெய்யும் கோடுகள் போன்ற மென்மையான அலைகள் போன்ற கோடுகள், மனித முகத்தின் அதீத கற்பனையின் விளக்கம் ஆகியவற்றின் மூலம் கனவு மாதிரியான தியானநிலை அனுபவம் உருவாக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் 1933-ல் பிறந்த, இந்தக் கலைப்படைப்பின் ஓவியர் அப்துல் கனி ஹமீது, பல்வேறு வளங்களின் ஓவியர்கள் சங்கத்தின் (அங்காத்தான் பெலுக்கிஸ் அனேக்கா டயா) நிறுவனஉறுப்பினர்களில் ஒருவர். மலாய் ஓவியர்களின் அச்சங்கம் தனி மற்றும் குழுக் கண்காட்சிகளை நடத்தியது. அவரது ஓவியங்கள் கருத்தியல்ஓவியங்கள் என்று கருதப்பட்டாலும், அவை வெறும் வடிவமும் வண்ணமும் மட்டும் கொண்டதல்ல என்பதோடு, யதார்த்த நிலையையும் அவை கோடி காட்டுகின்றன.
இந்த ஓவியத்தில உங்கள் கண்களை உடனடியாகக் கவரும் அம்சம் எது? ஓவியத்தின் மேல்பாதியில் தெரியும் முகமூடி போன்ற முகமா அல்லது கோணல்மாணலான கைகால்களா? அல்லது முன்னணியில் தீட்டப்பட்டுள்ள, அசையாத தண்ணீரைக் குறிக்கும் கருநீலவண்ணச் சாயல்களா ?
முதலில் நாம் முகத்தை அணுக்கமாகக் கவனிப்பதில் தொடங்குவோம். தியானத்தில் ஆழ்ந்திருக்கும் முகத்தின் விளிம்பைக் குறிக்கும் சுழலும் கோடுகளின் மீது கண்களை ஓடவிடுங்கள். ஒவ்வொரு நேர்கோட்டையும், ஒவ்வொரு வளைவையும், ஒவ்வொரு திருப்பத்தையும், ஒவ்வொரு சுழற்சியையும் பின்பற்றி இறுதியில் வலதுபுறத்தில் உள்ள கண்ணின் மீது நிலைநாட்டுங்கள். ஓவியத்தின் இந்தப் பகுதி, சிறு பரப்பளவில் மிக அதிகமான வண்ணங்களையும் வடிவங்களையும் அடக்கியிருப்பதைக் கவனியுங்கள். கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ள புருவங்கள் கருகிய மஞ்சள் வண்ணத் தோலுக்கு எதிராகத் தீட்டப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். சிறிதளவு சுருக்கத்துடன் காட்டப்பட்டுள்ள புருவத்தின் மூலம் எந்த உணர்ச்சி வெளிப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்த ஓவியத்தில் கண் இமை முடிகள் மட்டுமே தொடர்பற்ற கோடுகளாக விளங்குகின்றன.
தியானத்தில் ஆழ்ந்திருக்கும் முகத்தை கரும்ஊதா வண்ணக் கை, அதன் ஐந்து விரல்களும் கன்னத்தின் வளைவைச் சுற்றிப் பற்றியபடி மென்மையாக வருடுவதைக் கவனியுங்கள். முன்கையின் வளைவு நெடுகிலும் செல்லும் வளைந்த அலைபோன்ற கறுப்புக் கோட்டைத் தொடர்ந்து பார்வையைச் செலுத்துங்கள். இந்தக் கோடு ஒரு சக்தி கொடுக்கும் கோடு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் மார்பில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி, இதயத்தில் அமைதிச் சக்தியின் மையப் புள்ளியைச் சரியாகச் சுட்டிக்காட்ட முயலுங்கள். அந்தச் சக்தி, ஓவியத்தில் அலைபோன்ற கறுப்புக் கோடு கரும்ஊதா வண்ணக் கை வழியாகச் செல்வதுபோல், உங்கள் தோள்களில் பரவி, கைகளின் மேல்பகுதி வழியாக முன்கைகளுக்குப் பயணப்பட அனுமதியுங்கள். உங்கள் இதயத்திலிருந்து அமைதிச் சக்தி, உங்கள் உள்ளங்கைகளுக்குச் சென்று அங்கு ஒன்றுசேருவதற்கு அனுமதியுங்கள். இப்போது அது உங்கள் விரல்களுக்குள் பாய அனுமதியுங்கள். உங்கள் விரல்களை மார்புக்குக் கொண்டுவருவதன் மூலம் அந்தச் சக்தி உங்கள் முகத்தில் பாய அனுமதியுங்கள். அந்த வெதுவெதுப்பை உணருங்கள். ஓவியத்தில் உள்ள கறுப்புக் கோடுகள் தொடர்புபடுத்துவதைப்போல் உங்கள் உடலில் அந்தச் சக்தியின் ஓட்டத்தை உணருங்கள்.
இப்போது உங்கள் விழிப்புணர்வை விரிவுபடுத்துங்கள். உங்கள் உடலுக்குள் இருந்து வெளியே வந்து உங்கள் சுற்றுப்புறங்களைக் கவனியுங்கள்.
இந்த ஓவியத்தின் முன்னணியில் காணப்படும் கரும் நீல வண்ணக்கூறுகள், அமைதியான தண்ணீர்க் குளத்தைச் சுட்டுகின்றன. இங்குள்ள தூரிகைவீச்சுகள், ஓவியத்தின் மேற்பகுதியில் உள்ள நீலப் பரப்பில் உள்ளதைவிடத் தெளிவாகத் தெரிகின்றன. குளம் அமைதியாக இருந்தாலும், இந்தத் திண்மையான, அதிகச் சொரசொரப்புள்ள தூரிகைவீச்சுகள் தண்ணீரின் மென்மையான ஓட்டத்தைக் காட்டுகின்றன. இப்போது இந்தக் குளிர்ச்சியான, இருட்டான இடத்தில் நீங்கள் அதன் சாந்தத்திலும் அமைதியிலும் நனைந்துகொண்டு மென்மையாக மூழ்கியிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீரின் ஆழத்தில் உங்கள் ஒரு விரலை அமிழ்த்தி, அந்தக் குளிர்ச்சியையும் ஈரத்தையும் உங்கள் தோலில் உணருங்கள். இந்தத் தண்ணீர் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இது ஒரு குளமா? ஏரியா? நீர்த்தேக்கமா? கடலுக்கு அருகிலுள்ள குகையா? நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறீரகள்?
இப்போது நீரின் மேற்பரப்பில் கோடிகாட்டப்படும் பிரதிபலிப்பின் மீது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். முகத்தின் இந்த மெல்லிய பிரதிபலிப்பு, திருப்பிப் போடப்பட்ட அதன் ரகசிய உள் உலகம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நம் எல்லாருக்கும் ரகசிய உலகங்கள் இருக்கின்றன; நமது அன்றாட மனஉளைச்சல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்தும் இரைச்சல்மிக்க வெளி உலகத்தில் இருந்தும் தப்பித்து வரவேற்கத்தக்க இளைப்பாறுதலுக்காக நாம் நமது மனத்திற்குள் அங்கு பின்வாங்கிச் செல்ல முடியும்.
ஓவியரின் உள்மனத்தின் நிலை, இந்த ஓவியத்தில் ஒரு படைப்பாக்கச் சக்தியாகக் காணப்படுகிறது. அதில் விஞ்ஞானம், தத்துவம், மெய்ஞானம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக இருக்கின்றன. நாம் எவ்வாறு நம் உள் உலகங்களுக்குள் நுழைவது? இநதப் படைப்பில் காணப்படுவதுபோல் தியானம் அதற்கு ஒரு வழி.
நீங்கள் தியானத்தில் ஈடுபட முயன்றுள்ளீர்களா? நேரத்தை ஒதுக்கிக்கொண்டு உங்கள் உள் உலகத்திற்குள் பின்வாங்குவது உங்கள் மனம், உடல், உணர்வு ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஒரு பயிற்சியாகக்கூடும். தியானத்தில் ஈடுபட ஒரு வழி, என்ன நடக்கிறது என்பதை, அது நடக்கும்போதே உணர்தலாகும்.
உங்கள் மூச்சுவிடலுக்குக் கவனத்தைத் திருப்புவதன் மூலம் தொடங்குங்கள், தொடர்ந்து மூச்சுவிடுதலின் மூலம் உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் மூச்சுவிடும் பாணியை மாற்றிக்கொள்ளும் எந்த ஆசையையும் விட்டுவிடுங்கள். உங்கள் உடலுக்கு எது சிறந்தது என்பது தெரியும். அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மூச்சுவிடுவதால், எப்படி மூச்சுவிடுவது என்பது அதற்குத் தெரியும். ஆகவே மூச்சுவிடுதலின் உணர்வைச் சுவைக்க உங்களை அனுமதியுங்கள்.
மூச்சை உள்ளிழுத்தும், வெளியில் விட்டும், எங்கே உங்கள் மூச்சை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதையும் ஒவ்வொரு மூச்சுவிடுதலுக்கும் எவ்வாறு உங்கள் உடல் மென்மையாக அசைகிறது என்பதையும் கவனியுங்கள்.
நீங்கள் விரும்பினால் உங்கள் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள் அல்லது ஒரு மென்மையான பார்வையைச் செலுத்துங்கள். அந்தக் கணத்தில் உங்கள் நினைவுகள் என்ன உணர்த்துகின்றன? இந்த ஓவியம் ஏதாவது உணர்வுகளைத் தூண்டுகிறதா? அந்த உணர்வை உங்கள் உடலில் எந்த இடத்தில் உணர்கிறீர்கள்?
நீங்கள் விரும்பினால் மெதுவாக உங்கள் ஒரு கையை உங்கள் இதயத்தின் மீது வைத்துக்கொண்டு உங்களுடன் வெதுவெதுப்பான, கனிவான முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நினைவுகள், உணர்ச்சிகள், உணர்வுகள் எழும்போது விழிப்புடன் இருப்பதற்கே இந்த அழைப்பு. அவை எவ்வாறு தோன்றி, சிறிது நேரம் இருந்துவிட்டு, மறைகின்றன என்பதைக் கவனியுங்கள்.
மூச்சுவிடுதலுக்கு உங்கள் கவனத்தைத் திருப்பி, மெதுவாக அதற்குத் திரும்புங்கள். உள்மூச்சு, வெளிமூச்சு. உங்கள் மூச்சு உங்களுக்கு ஆதரவாகவும் நங்கூரமாகவும் இருப்பதற்கு அனுமதியுங்கள். உள்மூச்சு, வெளிமூச்சு. உள்மூச்சு, வெளிமூச்சு.
இப்போது நீங்கள் தயாராய் இருந்தால், மெதுவாக உங்கள் கண்களைத் திறங்கள், அவற்றை மூடியிருந்தால்.
நாம் இப்போது இந்த மெதுவான கலை வழிகாட்டி அங்கத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம்.
நீங்கள் இந்த மெதுவான கலை வழிகாட்டியால் மகிழ்ச்சி அடைந்திருந்தால், வெவ்வேறு கலைப் படைப்புகளைப் பற்றிய எங்கள் மற்ற அங்கங்களையும் நீங்கள் காணலாம். ஒவ்வொரு மெதுவான கலை வழிகாட்டியும் தனித்தன்மையுடன் மெதுவாகப் பார்க்கும் வகையிலும், நினைவில் கொள்ளத்தக்க நடைமுறைகளுடனும் நீங்கள் அந்தக் கலைப்படைப்பை அர்த்தமுள்ள வகையில் காண உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மெதுவான கலை வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள கலைப்படைப்புகள் அனைத்தும் பரிவுத் திரட்டு எனும் தொகுப்பைச் சேர்ந்தவை. தேசிய திரட்டைச் சேர்ந்த அந்தக் கலைப்படைப்புகள் நோய்தீர்க்கும் பயன்பாட்டிற்காகக் கருப்பொருள் ரீதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
இப்போது கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து, நேரத்தைக் கருதாமல் மெதுவாகச் சென்று உங்களைச் சுற்றியுள்ள ஓவியங்களைப் பார்த்து ரசிக்க உங்களை அழைக்கிறோம்.
Artwork details
- Artist Name
- Abdul Ghani Hamid
- Full Title
- The Face in Meditation
- Time Period
- 1975
- Medium
- Oil on canvas
- Extent Dimensions (cm)
- Dimensions 2D: Object Dimensions: 86 x 61 cm
- Credit Line
- Gift of the artist. Collection of National Gallery Singapore.
- Geographic Association
- Singapore
- Accession Number
- P-0233