முழு மலர்ச்சியின் காலம்
மெதுவான கலை வழிகாட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். அதன் வழியாக, சான் மின்னின் முழு மலர்ச்சியின் காலம், சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் உங்களுக்குக் கொண்டுவருகிறது.
மெதுவாகப் பார்த்தல் மற்றும் கவனமுடைமை ஆகிய கொள்கைகளால் உந்தப்பட்டு, மெதுவான கலை வழிகாட்டி, கலைக்கூடத்திலுள்ள ஒரு கலைப்படைப்பின் வாயிலாக உங்களை ஓர் ஆழ்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும். இந்த அனுபவம், மெதுவடைதல், காணொளிக் கலையைப் பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழித்தல், அதை உணர்வுடனும், ஆழ்ந்து ஆராய்ந்தும் உள்வாங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வழிகாட்டி, கவனமுடைமை நடைமுறைகளை வெளிப்படுத்தி, கலையைப் புலன்கள் சார்ந்த மற்றும் பிரதிபலிக்கிற அனுபவத்தைப் பெறும் வகையில் சிந்திக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
கவனமுடைமை அடிப்படையிலான இந்த அனுபவம் மிகவும் தன்னாய்வு மிக்கது என்பதால், அது உங்கள் எண்ணங்களுடனும் உணர்ச்சிகளுடனும் உங்களைக் கலந்துகொள்ள அழைக்கிறது; அதை, சில வேளைகளில் கடுமையானதாகவும் திணறவைப்பதாகவும் உணரலாம். இன்று அதுதான் உங்கள் நிலைமை என்றால் தயவுசெய்து இந்த ஒலி அனுபவத்திலிருந்து விலகி, அமைதி அறைக்குச் செல்லுங்கள் அல்லது பாதுகாப்பாக ஓய்வெடுக்க முடியும் என்று நீங்கள் உணரும் இடத்திற்குச் செல்லுங்கள்.
மெதுவான கலை வழிகாட்டியுடனான உங்கள் அனுபவத்தின் முடிவில், நீங்கள் அந்தக் கலைப்படைப்புடன் ஓர் ஆழமான, உணர்வுபூர்வமான தொடர்பைக் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும், நீங்கள் இந்தக் கணத்தில் நிலையாகவும் அமைதியாவும் உணர்வீர்கள் என்றும் நம்புகிறோம்.
இந்த ஒலி வழிகாட்டி, உங்களை இரண்டு நிறுத்தங்களுக்கு இட்டுச் செல்லும் – முதலில் அமைதி அறை; அதன் பிறகு, கண்காட்சிக் கூடங்களுக்குள் உள்ள கலைப்படைப்பு. உங்கள் அனுபவத்தின் ஊடே, கலைப்படைப்பு இருக்கும் இடத்தை அறிவது உள்பட உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் எங்கள் நட்பான முன்சேவை முகப்பு ஊழியர்களை நாடலாம்.
உங்கள் சுற்றுலாவைத் தொடங்க நகர மண்டபப் பிரிவின் கீழ்த்தளம் 1-ல் உள்ள அமைதி அறைக்குச் செல்லுங்கள்.
நீங்கள் அமைதி அறைக்குச் சென்றபிறகு, அடுத்த தடத்தில் உள்ள “பிளே”யை அழுத்துங்கள்.
பர்மிய ஓவியர் சான் மின் வரைந்த முழு மலர்ச்சியின் காலம் ஓவியத்திற்கு நாம் வந்துவிட்டோம். நாம் இந்தக் கலைப்படைப்பை ஆராயும் வேளையில் உங்களுக்கு வசதியான முறையில் கட்டுப்பாடின்றி நகரலாம். இந்தக் கலைப்படைப்புக்கு முன்னால் கலைக்கூடத் தரையில்கூட நீங்கள் அமரலாம்.
உடனடியாக நீங்கள் இந்த ஓவியத்தின மைய உருவத்தைக் கவனிக்கலாம் – ஒரு பெண் தனது கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறாள்; அவரின் தலை இருக்க வேண்டிய இடத்தில் கழுத்திலிருந்து பூக்கள் மலர்ந்துள்ளன.
இந்தப் பெண் யார் என்று மேலும் சொல்வதற்கு என்ன மறைக்குறிப்புகள் கலைப்படைப்பில் காணப்படுகின்றன? கவனமாகப் பாருங்கள். அவரது இரவிக்கையின் வண்ணங்களைக் கவனியுங்கள் – சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை. இரவிக்கையில் நட்சத்திர வடிவத்தைக் கவனியுங்கள் – இரவிக்கையில் நடுவிலும் சட்டைக் கையின் ஓரத்திலும் நீலப் பட்டையில் வெள்ளை நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வண்ணங்களும் வடிவங்களும் 1974-க்கு முன் பயன்படுத்தப்பட்ட பர்மா ஒன்றியத்தின் தேசியக் கொடியை நினைவுபடுத்துகின்றன. இந்தப் பெண் இடுப்பைச் சுற்றி அணிந்து, மடிக்கப்பட்டு இடது பக்கம் செருகப்பட்டுள்ள நீளத் துணியைக் கொண்டு இவர் மியன்மாரை அல்லது பர்மாவைச் சேர்ந்தவர் என்பதை நாம் மேலும் முடிவு செய்ய முடியும். இது பர்மியக் கலாசாரத்தில் ஆண்களும் பெண்களும் அணியும் லுங்கியைப் போன்றது. நாம் இந்த ஓவியத்தைப் பார்க்கும் வேளையில் “அன்பு” எனும் வார்த்தையுடன் ஓர் உலோகச் சங்கிலி கித்தானில் தைக்கப்பட்டிருப்பதைக் காணுங்கள்.
முண்டத்தில் கைகளைக் கட்டியபடி நிற்கும் கவரும் பெண்ணின் தோற்றத்தைக் கவனியுங்கள். அவை கோபத்தில் கட்டப்பட்டிருக்கின்றனவா? அல்லது மறுப்புத் தெரிவிக்கவா? அவை எதிர்ப்புத் தெரிவிக்கக் கட்டப்பட்டிருக்கின்றனவா அலலது அவர் தன்னைப் பாதுகாக்க முயல்கிறாரா? அவர் குளிரை உணர்ந்து தன்னை வெப்பப்படுத்திக்கொள்ளக் கைகளைக் கட்டியிருக்கிறாரா? அல்லது ஒரு கனிவான செயலுக்காக அவை கட்டப்பட்டிருக்கின்றனவா? அவர் தமக்குத் தாமே பரிவும் அன்பும் காட்டி மென்மையுடன் தம்மைப் புலப்படுத்துகிறாரா? ஒருவேளை சிதைந்து விடாமல் இருக்க, தம்மை ஒன்றாகப் பிணைத்திருக்க அவர் அவ்வாறு செய்கிறாரா?
உங்களுக்கு வசதியாக இருந்தால், இந்த நிலையில் நின்று பாருங்கள். உங்கள் உடலை நிற்பதற்கு ஏதுவாக நகர்த்தி, கால்களைத் தரையில் பதித்து, கைகளை இடுப்புக்கு மேலே கட்டிக்கொண்டு இந்த மாது நிற்பதுபோல் நில்லுங்கள். உங்கள் கைகளை மடக்கும்போது என்ன உணர்வுகளை உடனடியாக நீங்கள் பெறுகிறீர்கள்? உங்கள் தோள்கள் இறுக்கமடைவதை உணர்கிறீர்களா? அதற்குப் பதில் உங்கள் கைகளை உங்களுக்குச் சாதகமாக, உங்களுக்கு ஆதரவாக வைத்துக்கொள்ள முயலுங்கள்.
இந்த ஓவியத்தை வரைந்த சான் மின், மியன்மாரில் தொடக்க ஓவியச் சோதனை முயற்சிகளுக்கு ஒரு முன்னோடி. அவருடைய பெரும்பாலான ஓவிய நடைமுறைகள் சமூக, அரசியல் நீதிக் கருப்பொருள்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அவரது மற்ற படைப்புகளைப் போலவே இந்தப் படைப்பும் துணிவுடன் வண்ணத்தைப் பயன்படுத்தல், ஈர்க்கும் தோற்றங்கள், இவை அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டு குறியீடாக, பெரும்பாலும் அதீத கற்பனையான உள்ளடக்கத்தைக் காட்டும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
1974-ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக சான் மின் 1975 முதல் 1978 வரை சிறையில் அடைக்கப்பட்ட பிறகு முழு மலர்ச்சியின் காலம் படைக்கப்பட்டது. இந்தப் படைப்பு 1979-ல் கங்காவ் கிராம ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டபோது தணிக்கை அதிகாரிகள் அதை ஒரு தீக்குறியாகக் கருதி உடனே அகற்றிவிட்டனர். தணிக்கை முத்திரைகள் கித்தானின் முன்னும் பின்னும் பதியப்பட்டிருந்தன. ஓவியத்தின் மேற்பரப்பில் நீள்சதுர வடிவத்தில் தடைசெய்யப்பட்டது என அறிவிக்கும் மங்கலான பல முத்திரைகளைக் காணலாம். எத்தனை தணிக்கை முத்திரைகளை உங்களால் காண முடிகிறது? அனைத்து ஏழு முத்திரைகளையும் காண முடிகிறதா?
பலமுறை தணிக்கை செய்யப்பட்டதாலோ, சிறையில் அடைக்கப்பட்டதாலோ அல்லது தொடர்ந்த ஆட்சியின் அடக்குமுறைகளாலோ சின் மின் மனம் தளரவில்லை.
அழகான, மதிப்புமிக்க ஓர் உடலில் இருந்து பூக்கள் மலர்வதை அவர் எவ்வாறு படைத்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். பூக்களைச் சுற்றியுள்ள வெளிச்சத்தைக் கவனியுங்கள், அங்குள்ள மஞ்சள் வண்ணம் பின்புலத்தின் மற்ற பகுதிகளைவிட மங்கலாக உள்ளதைக் கவனியுங்கள். ரோஜாக்களில் உள்ள கூர்மையான முட்களைக் கவனியுங்கள்; இருண்ட மஞ்சள்-பச்சைப் பின்புலத்திற்கு எதிராக, இளஞ்சிவப்பு இதழ்களையும் கவனியுங்கள். அவற்றின் மெல்லிய வாசனையைக் கற்பனைசெய்து பாருங்கள்.
அந்த மாதின் உடலில் இருந்து வெளியாகும் பேணுகின்ற ஒளியிலிருந்து வளர்வதைப் போல், உள்ளிருக்கும் சக்தியிலிருந்து வெளிவருவதுபோல், மலர்கள் அனைத்துத் திசைகளிலும் மலர்வதைக் கவனியுங்கள். வழக்கமாக சூரியனை நோக்கி செடிகள் வளர்வதுபோல் அவை ஒரே திசையில் வளரவில்லை. அதற்குப் பதில் அவை செழிப்பாக வெளிப்புறத்தை நோக்கி மலர்கின்றன, இந்த உலகின் இடத்தை எடுத்துக்கொள்வதுபோல, இந்த மாதின் உயிர் கொடுக்கும் சக்தி சூரியனைவிட அதிக வெளிச்சமிக்கதாய் ஒளிர்கிறது என்பதைப் போல. தணிக்கை முத்திரைகளும் நிராகரிப்பு முத்திரைகளும் அந்தத் தோற்றத்தைச் சுற்றிக் காணப்படுகின்றன; ஆனால் அவை அதன் வலிமையைக் குறைக்கவில்லை.
அந்த ரோஜாக்களைப் போலவே, இந்த மாதின் இனிமைப் பண்பிலிருந்து நாம் உயிரை உறுதிப்படுத்தும் சக்தியைப் பெறுவோம். சின் மின்னின் அமைதியான எதிர்ப்பிலிருந்தும் மீள்திறனிலிருந்தும்நாம் வலிமை பெறுவோம். மிகவும் இருண்ட காலங்களில்கூட அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் அழகையும் ஓவியத்தையும் படைத்த சின் மின்னின் உறுதியிலிருந்து நாம் நம்பிக்கையைப் பெறுவோம்.
நம் வாழ்வில் அடிக்கடி சிரமங்களும் ஏன் வலிகூட ஏற்படும். சில சமயம் இவை தாங்க முடியாத வகையில் இருக்கும். இப்போது நாம் ஒரு சிறு தியான நடைமுறையை வரவேற்போம். இந்த நடைமுறை தன்னிரக்கத்தைத் தூண்டிவிடவும், தேவையேற்படும்போது நமக்கு நாமே ஆதரவாக இருப்பதற்கும் உதவும்.
உங்களுக்குச் சுமுகமாக இல்லாத ஒரு நிலையை நினைவுகூருங்கள்.
அவ்வாறு நினைவுகூரும்போது அந்தச் சூழ்நிலை அப்போது உங்களுக்கு ஏற்படுத்திய உணர்வுகளையும் அங்கீகரியுங்கள். ஒருவேளை அது கணநேர இதயவலியாகவோ, விரக்தியாகவோ, கோபமாகவோ, சோகமாகவோ இருந்திருக்கலாம். ஒருவேளை அது நம்பிக்கையிழந்த சூழலாகவோ அல்லது உங்களால் புரிந்துகொள்ளமுடியாத குழப்ப நிலையாகவோ இருந்திருக்கலாம்.
நீங்கள் உங்கள் கையை உங்கள் இதயத்தில் வைத்து “அது வலித்தது. அது மிகவும் கடினமாக இருந்தது,” என்று மெதுவாகவும் தெளிவாகவும் சொல்ல விரும்பலாம். அல்லது “அவுச்” என்றுகூடச் சொல்லலாம்.
நீங்கள் தனியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நிலையில் உள்ள எவரும் அந்த வலியை உணரக்கூடும், ஒருவேளை வேறொரு அளவிற்கு, வேறொரு வகையில் அல்லது ஒருவேளை நீங்கள் உணர்ந்த அதே வகையில்.
இதே சூழ்நிலையில் இருந்த குறைந்தது ஒரு நபருடனாவது உங்களால் தொடர்புபடுத்த முடியுமா என்று பாருங்கள்; அந்த மற்றொரு நபரிடம் ஆழ்ந்த பரிவை உங்களால் உணர முடியுமா என்று பாருங்கள்.
உங்கள் இதயத்தில் கைவைத்து, அதன் வெதுவெதுப்பு மார்பு முழுவதும் பரவுவதை உணருங்கள். உங்களுக்கு ஆதரவாக, உங்களுக்குக் கவனிப்பும் பாசமும் வழங்க, என்ன வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறீர்கள் என்பதை உணர்ந்து அவற்றைப் பேசுங்கள். நீங்கள் அவ்றறை உரக்கப் பேசலாம் அல்லது உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளலாம். நீங்கள் பின்வருமாறு கூறலாம்:
நான் என்னிடம் கனிவாகஇருப்பேனாக. நான் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்வேனாக. நான் என்னைத் தீங்கிலிருந்து பாதுகாத்துக்கொள்வேனாக. நான் என்னிடம் அன்புசெலுத்துவேனாக.
நீங்கள் வார்ததைகளுக்காகச் சிரமப்பட்டால் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் அதே பிரச்சினையாலோ அல்லது அதே சூழ்நிலையில் போராடுவதாகவோ கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நண்பரிடம் என்ன கூறுவீர்கள்? இந்த அன்பருக்கு ஆலோசனை கூறாமல், என்ன வார்த்தைகளைக் கூறி ஆதரவளிப்பீர்கள்?அதே வார்த்தைகளை நீங்கள் உங்களுக்குச் சொல்ல முடியுமா?
அந்த வார்த்தைகள் உங்களை மெதுவாக நிரப்ப அனுமதியுங்கள். மெதுவாக உங்கள் கண்களைத் திறங்கள், சில மூச்சுகளைவிட்டு இந்த நடைமுறையை முடித்து வையுங்கள். இந்த நடைமுறை பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் உங்களுக்கு வாழ்க்கையில் சிரமம் ஏற்படும் போதெல்லாம் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு இதமான, ஆதரவான தொடுதலுக்காக இந்த நடைமுறையைப் பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்யும்போது உங்களுக்குப் பரிவான வார்த்தைகளைப் பரிசளித்து, உங்களின்மீது இரக்கத்தைக் காட்டுங்கள்.
நாம் இப்போது இந்த மெதுவான கலை வழிகாட்டி அங்கத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம்.
நீங்கள் இந்த மெதுவான கலை வழிகாட்டியால் மகிழ்ச்சி அடைந்திருந்தால், வெவ்வேறு கலைப் படைப்புகளைப் பற்றிய எங்கள் மற்ற அங்கங்களையும் நீங்கள் காணலாம். ஒவ்வொரு மெதுவான கலை வழிகாட்டியும் தனித்தன்மையுடன் மெதுவாகப் பார்க்கும் வகையிலும், நினைவில் கொள்ளத்தக்க நடைமுறைகளுடனும் நீங்கள் அந்தக் கலைப்படைப்பை அர்த்தமுள்ள வகையில் காண உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மெதுவான கலை வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள கலைப்படைப்புகள் அனைத்தும் பரிவுத் திரட்டு எனும் தொகுப்பைச் சேர்ந்தவை. தேசிய திரட்டைச் சேர்ந்த அந்தக் கலைப்படைப்புகள் நோய்தீர்க்கும் பயன்பாட்டிற்காகக் கருப்பொருள் ரீதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
இப்போது கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து, நேரத்தைக் கருதாமல் மெதுவாகச் சென்று உங்களைச் சுற்றியுள்ள ஓவியங்களைப் பார்த்து ரசிக்க உங்களை அழைக்கிறோம்.
Artwork details
- Artist Name
- San Minn
- Full Title
- Age of Full Bloom
- Time Period
- 1979
- Medium
- Oil and metal chain on canvas
- Extent Dimensions (cm)
- Dimensions 2D: Image measure: 89 x 59 cm
- Credit Line
- Collection of National Gallery Singapore.
- Geographic Association
- Myanmar
- Accession Number
- 2015-00411