Stop 8
ஓவிய வகுப்பு
லிம் இயூ குவான்
Artwork
208.ஓவிய வகுப்பு (0:00)
0:00
0:00
லிம் இயூ குவானால் படைக்கப்பட்ட இந்த ஓவியம், நான்கு மாணவர்கள் காணப்படும் கலைக்கூட மூலை ஒன்றில் நெருக்கமான காட்சியைக் காட்டுகிறது. சுவரில் தொங்கும் ஓவியச் சட்டம், வரையும் பலகைகள், பூச்சுமாதிரி முதலியன, இது நுண்கலை பயிலும் மாணவர்கள் கல்வி பயில்வதற்கான கல்விச்சூழல் என்பதைக் காட்டுகின்றன. மாணவர்கள் ஆழ்ந்த சிந்தனையுடன், ஒருவர் முதுகு மற்றவர் முதுகை நோக்கி இருக்குமாறு அமர்ந்துகொண்டு, தங்கள் முன்னால் உள்ள சித்திரப்பாடத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்துகின்றனர். தரையில் திறந்தபடி இருக்கும் பையிலிருந்து, வெவ்வேறு அளவிலான தூரிகைகள் சிதறிக்கிடக்கின்றன. மேலும், படத்தின் முன்னணியில் உள்ள மாணவர், சில தூரிகைகளை ஒரு கையில் பிடித்தபடி, மற்றொரு கையில் உள்ள தூரிகையால் படம் வரைகிறார்.
அவரது தந்தையின் அறிவுறுத்தலினால், நாஃபா என்றழைக்கப்படும் நன்யாங் நுண்கலைக் கழகத்தை உருவாக்கிய கலைக் கல்வியாளரான லிம் ஹக் டாய் என்பவரிடம், லிம் இயூ குவானின் சொந்தக் கலைப் பயிற்சி சிறுவயதிலேயே தொடங்கியது. அவர், 1950-களில் நாஃபாவின் மாணவனாக இருந்து, பின்னாளில் பேராசிரியராகவும், இறுதியாக 1963-ல் இரண்டாம் முதல்வராகவும் ஆனார். பிரகாசமான எதிர்காலமுடைய, வளர்ந்து வரும் ஒரு கலைஞராக அப்போது அவர் இருந்தார். அவருக்கு மிகவும் பிடித்த, அவர் நிபுணத்துவம் பெற்றிருந்த துறையான, கலைஞர்களுக்குப் பயிற்சியளிப்பது பற்றிய ஆழ்ந்த அறிவை அவருடைய ஓவியங்கள் நமக்கு வழங்குகின்றன.