Stop 4
சௌரி
லியூ காங்
Artwork
204.சௌரி (0:00)
0:00
0:00
நடன பயிற்சியின் இடையில் இருக்கும் ஒரு பாலி நடனக் கலைஞரின் பின்புறத் தோற்றத்தைச் சௌரி சித்தரிக்கிறது. நடன உடையில், அழகான ஆபரணங்களால் அலங்கரித்துக்கொண்டு, மண்டியிட்ட நிலையில், வலது கையில் இளஞ்சிவப்பு விசிறியுடன், இடது உள்ளங்கையை கீழ்நோக்கியவாறு வெளிப்பக்கமாக நீட்டி இருக்கிறாள். இது பாலி நடனத்திற்கே உரித்தான முத்திரையைக் குறிக்கிறது.
லியூ காங், 1952-ஆம் ஆண்டு பாலிக்கு, அவரது எதிர்கால வளர்ச்சிக்கு அச்சாரமாக அமைந்த ஒரு பயணத்தை மேற்கொண்டபோது, இந்த ஓவியத்தை மெல்லிய வண்ணத்தில் குறிப்புகளாக எடுத்துக்கொண்டு வந்தார். அதை மேற்கோளாகக் கொண்டு, ஒராண்டு கழித்து, சிங்கப்பூரில் இதை எண்ணெய் வண்ண ஓவியமாகப் படைத்தார். நடனமங்கையின் தலை அலங்காரம், உடைகளின் நுண்ணிய வேலைப்பாடுகள் என அவர் நடனமங்கையைப் பார்த்தபோது பதிவுசெய்திருந்த அனைத்து விபரங்களையும் மறக்காமல் வரைந்திருந்தார். ஆனாலும், மூல ஓவியத்தில் இல்லாத சில அடிப்படைக் கூறுகளைப் புதிதாக அறிமுகப்படுத்தினார். எடுத்துக்காட்டாக, ஓவியத்தின் பின்னணியாக ஒரு கோயிலின் முற்றத்தைச் சேர்த்தார்.
இந்தப் பாலிப் பயணம் அவரது கவனத்தை, தென்கிழக்காசிய பாரம்பரியத்தை ஓவியக் கருப்பொருளாக்கிக் கொள்வதில், செலுத்தியது. இந்தப் பயணத்திற்குப் பின்பு, அவர் படைத்த பெரும்பாலான ஓவியங்களும், வரிவடிவங்களும் அவரது தொடக்க காலப் படைப்புகளில் இல்லாத அளவிற்கு, உயர் தரமான கலைப்பண்புகள் மற்றும் படிவங்களோடு இருந்தன.