Stop 12
மஞ்சள் மனிதனின் பயணம் எண்.11 பல இனக் கலாச்சாரங்கள்
லீவென்
Artwork
212.மஞ்சள் மனிதனின் பயணம் எண்.11 பல இனக் கலாச்சாரங்கள் (0:00)
0:00
0:00
இந்தக் கலைபடைப்பு, 1997-ல் சிங்கப்பூரில் நடந்த பல இனக் கலாச்சாரங்கள் பற்றிய கருத்தரங்கின் போது கலைஞர் லீவென் நடத்திய ஒரு நிகழ்ச்சியைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மனிதனின் பயணம் என்கிற ஒரு பெரிய தொடரின் ஒரு பகுதி இது. இந்தத் தலைப்பு, கலைஞருடைய சீன இனத்தைக் குறிக்கிறது. அவர் இந்தப் படைப்பில், தன்னையே மஞ்சள் நிறத்தில் வரைந்து அதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
இந்தக் கலை நிகழ்ச்சியில், மஞ்சள் வண்ணத்திலிருக்கும் லீ, சிங்கப்பூர் கலை 97 கண்காட்சியைக் குறைகூறும் விதமாகத் தன்னுரையைத் தொடங்கினார். அதில் அவர், மை மற்றும் நீர்வண்ணக் கலைஞர்களுக்கே அதிகப் பிரதிநிதித்துவம் கொடுத்து, செயல்திறன், நிறுவல்கலை மற்றும் ஆராயும் கலை செய்யும் கலைஞர்களை ஒதுக்குவதாக வாதிட்டார். கலை என்றால் என்ன என்பதை வரையறுக்கும் நடைமுறை, கலைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் பெற்றுத்தரும் ஊடகங்கள் உள்ளிட்ட பல வகையான பிரச்சினைகளை எழுப்பினார்.
கலைஞர் அவருடைய உரையின் இறுதியில், சிங்கப்பூரில் சீன, மலாய், இந்தியர் மற்றும் மற்றவர்கள் என்ற இனங்களைக் குறிக்கும் C, M, I மற்றும் O என்ற ஆங்கில எழுத்துக்களை அரிசியைக் கொண்டு உருவாக்கினார். லீ இந்த நீக்குப் போக்கற்ற வகைப்படுத்தலை, கலைகளை வகைப்படுத்தும் முறையோடு ஒப்பிட்டார். எளிதில் விவரிக்கப்படக்கூடிய கலைவகைகள் அங்கீகரிக்கப்படும்போது, செயல்திறன் போன்ற மாற்றுக் கலை வகைகள் இன்னும் நிலைநாட்டப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். பிறகு அவர் அரிசி வடிவத்தைக் கலைத்துவிட்டார். இதன்மூலம், கலை வகைகளையும், அவற்றை வரிசைப்படுத்தலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இனம், இன அமைப்பு, கலைசார்ந்த ஒழுங்கு முறைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்ந்த ஒருங்கிணைப்பினால், இந்த மஞ்சள் மனிதன் தொடர், லீயின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும், மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. 1990-களின் உலகளாவிய செயல்திறன் கலையில் தனக்கென ஒரு இடம் பிடித்த ஒரு படைப்பாகவும் இது கருதப்படுகிறது.