Stop 11
மூன்று தெர்மோஸ் குடுவைகளின் ஆய்வு
எம் ஃபைசல் ஃபாடில்
Artwork
211.மூன்று தெர்மோஸ் குடுவைகளின் ஆய்வு (0:00)
0:00
0:00
ஃபைசல் ஃபாடிலின் இந்த ‘மூன்று தெர்மோஸ் குடுவைகளின் ஆய்வில்’ இடம் பெற்றிருப்பவை மூன்று உலோகக் குடுவைகள். முதல் குடுவை மூடியால் மூடப்பட்டிருக்கிறது, இடையிலிருக்கும் குடுவையின் மூடி திறந்திருக்கிறது, கடைசிக் குடுவைக்கு மூடி இல்லை. இவை மூன்றும், சிங்கப்பூரின் சுங்கைச் சாலையில் உள்ள, பழம்பொருட்கள் விற்கும் பிரபலமான திருடர்கள் சந்தையில் வாங்கப்பட்டவை.
குடுவைகள் வைக்கப்பட்டிருக்கும் விதம் அப்படியே மரபின்படி தான் உள்ளது என்றாலும், அவற்றின் தோற்றம் அறிவார்ந்த தலைப்புடன் ஒத்துப்போனதாகத் தெரியவில்லை. அவற்றிலுள்ள துரு மற்றும் குழிகள் முதலியவற்றோடு, அவற்றின் அசல் நிலையிலேயே அவை இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் தோற்றத்தைக் கலைஞர் எந்த முறையிலும் மாற்றவில்லை.
சிங்கப்பூர் கலைஞர் ஒருவர், உள்ளூர் வழக்கத்திற்கிணங்க ஒரு புதிய முறையில் கலையை வரையறுப்பதைக் குறிக்க, இந்தப்படைப்பு ஒரு சிறந்த உதாரணம். தேசிய அருங்காட்சியகத்தில் சக கலைஞர் டேங் டா வூ நடத்திய இரண்டு வார சிற்பக் கருத்தரங்கில் இது உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கில்தான் ஃபைசல் முதன் முதலாக மார்சல் டுகாம்ப் மற்றும் டுகாம்ப்பின் ஆயத்தக் கலைபற்றிக் கற்றுக்கொண்டார்.
அந்த நாட்களில், சிங்கப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பிராந்தியங்களில், சிற்ப மரபு குறித்த விவாதங்களுக்கு இந்தப்படைப்பு வித்திட்டது. கலைஞர்களின் பொறுப்புப் பற்றியும், கலைப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் அல்லாதவற்றிற்கு இடையேயான வேறுபாடு பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.